டொரான்டோ: அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடாவை இணைத்து விட வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் பதவியேற்க உள்ளார்.விரைவில் அதிபர் பதவியேற்க உள்ள டிரம்ப், கனடா, மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்களை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அந்த நாடுகளில் இருந்து வரும் பொருட்கள் மீது 25 % வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் புளோரிடாவில் உள்ள தனக்கு சொந்தமான கிளப்பில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு டிரம்ப் இரவு விருந்தளித்தார்.
இந்த விருந்தின் போது கூடுதல் வரி விதிப்பு குறித்த பிரச்னையை ஜஸ்டின் ட்ரூடோ எழுப்பினார். அதற்கு டிரம்ப், பேசாமல் கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக இணைக்க பரிந்துரை செய்யலாம் என்று நினைக்கிறேன் என்று கூறியுள்ளார். இரு தலைவர்களுக்கு இடையே நடந்த இந்த உரையாடல் இப்போதுதான் வெளியே வந்துள்ளது. கனடா குறித்த டிரம்பின் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதுகுறித்து விருந்தில் கலந்து கொண்ட கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் டொமினிக் லீபிளாங்க் ஒட்டாவாவில் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்,‘‘கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக்குவேன் என்று டிரம்ப் நகைச்சுவையாக தான் பேசினார்’’ என்றார்.
The post அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறுமா கனடா?.. ஜஸ்டின் ட்ரூடோ முன்னிலையில் டிரம்ப் பேச்சால் சர்ச்சை appeared first on Dinakaran.