- அமைச்சர்
- அன்பில் மகேஷ்
- சென்னை
- பள்ளி கல்வி
- அன்பில் மஹேஸ்போய்யாமோஷி
- அண்ணா நூலகம், கோட்டூர்புரம், சென்னை
- அன்பில் மகேஷ்
சென்னை: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூலகத்தில் நேற்று நடந்த பாராட்டு விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். பிறகு அவர் அளித்த பேட்டி: மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் விவரங்கள் கேட்டோம். அதில் விழுப்புரம் மாவட்டத்தில் 45 பள்ளிகள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. விரைவில் தொடங்க உள்ள அரையாண்டு தேர்வுக்கான பாடப்பகுதிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளனவா என்று கேட்கப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் அந்த பாடப்பகுதிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்நிலையில், டிசம்பர் 2ம் தேதி செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளன. அதனால் எங்கெல்லாம் மழைநீர் தேங்கியுள்ளதோ அந்த மாவட்டங்களில் செய்முறைத் தேர்வுகள் நடத்த முடியாத நிலை இருந்தால், அந்த மாவட்டங்களில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் செய்முறைத் தேர்வுகளை முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 9ம் தேதி முதல் 23ம் தேதி வரைக்கும் அரையாண்டுத் தேர்வு நடக்கும் என அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. எந்த மாவட்டங்களில் தேர்வு நடத்த முடியாத நிலை உள்ளதோ அந்த மாவட்டங்களில் அந்த பள்ளி வளாகங்களில் உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலம் அவற்றை சரி செய்து நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இடையில் தேர்வுகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டால் விடுபட்ட தேர்வுகளை ஜனவரி முதல் வாரத்தில் விடுபட்ட செய்முறை தேர்வுகள், எழுத்து தேர்வுகளையும் நடத்தி முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அரையாண்டுத் தேர்வு ஒத்திப் போக வாய்ப்பில்லை. கடும் பாதிப்புள்ள பள்ளிகளுக்கு மட்டும் ஜனவரி மாதம் நடத்தப்படும். தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு சென்று சேர்ந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. அதன் மூலம் அதிக அளவில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது.
மேலும், காலியாக உள்ள தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் தொடர்பாக வழக்கு உள்ளது. அதற்கு பிறகு அவை நிரப்பப்படும். மழை பாதிப்பினால் மாணவர்களின் சான்றுகள், பாடப்புத்தகங்கள் பாதிக்கப்பட்டு இருப்பது குறித்து விவரங்கள் வரப்பெற்றதும் அவை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்த போதும் தலைமை முக்கிய ஆவணங்கள் உள்ள அறைகள் பள்ளிகளின் கீழ்த்தளத்தில் இருந்தால் அவற்றை மேல் தளத்துக்கு மாற்றுங்கள் என்று தெரிவித்துள்ளோம். அதன்படி, பல இடங்களில் மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
The post மழை பாதிப்பு உள்ள பள்ளிகளில் ஜனவரியில் அரையாண்டு தேர்வு: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் appeared first on Dinakaran.