சென்னை: அமரன் திரைப்படத்தில், கதாநாயகி சாய்பல்லவியின் மொபைல் எண் என்று தனது எண்ணை காண்பித்துள்ளனர். பலர் அந்த எண்ணை தொடர்பு கொண்டதால் தனக்கு மனஉளைச்சல் ஏற்பட்டதாக கூறி சென்னையை சேர்ந்த வாகீசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்ததால், தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இதனால், தன்னால் படிக்க முடியவில்லை. நூற்றுக்கணக்கான அழைப்புகள் வந்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு தயாரிப்பாளரும், இயக்குனரும் தான் காரணம். இதுகுறித்து அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றும் அந்த தவறை அவர்கள் திருத்தவில்லை. இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பிறகும் அழைப்புகள் தொடர்ந்து வருகின்றன. அரசியல் சாசனம் தனக்கு வழங்கியுள்ள அந்தரங்க உரிமைகள் பாதிக்கப்படுவதால் ஒரு கோடியே 10 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டும். படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும். தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும்.
தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post அமரன் படத்தில் கதாநாயகியின் மொபைல் எண்ணாக எனது செல்போன் நம்பரை பயன்படுத்தியதால் மன உளைச்சல்: தயாரிப்பாளரிடம் இழப்பீடு கேட்டு ஐகோர்ட்டில் மாணவன் வழக்கு appeared first on Dinakaran.