×

2024-ஆம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ்நாட்டிற்கு விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்” விருது வழங்கி கெளரவம்..!!

சென்னை: 2024-ஆம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ்நாட்டிற்கு விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காண்பித்து வாழ்த்து. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று (4.12.2024) தலைமைச் செயலகத்தில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து, புதுதில்லியில் 30.11.2024 அன்று நடைபெற்ற இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு சார்பில் FICCI Turf 2024 – 14வது சர்வதேச விளையாட்டு கருத்தரங்கில் 2024-ஆம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில், விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக (Best State Promoting Sports) தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டு, அதற்கென வழங்கப்பட்ட விருதினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முனைப்பான நடவடிக்கைகள் இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகள் உள்ளிட்ட 3,345 வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.104.22 கோடி உயரிய ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் விளையட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டின் 12,525 கிராம பஞ்சாயத்துகளுக்கு ரூ.85.99 கோடி செலவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் விளையாட்டு உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடும் வகையில், கோபாலபுரத்தில் குத்துச்சண்டை அகாடமி, மதுரையில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.8.25 கோடியில் செயற்கை இழை ஓடுதளப்பாதை மறுசீரமைப்பு, இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ரூ.50 லட்சத்தில் பளுதூக்கும் பயிற்சி மையம், தமிழ்நாட்டில் 9 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கம், தூத்துக்குடி மாவட்டம். கோவில்பட்டியில் ரூ.7 கோடியில் வளைகோல்பந்து விளையாட்டு வீரர்களுக்காக முதன்மை நிலை விளையாட்டு மையம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாகம், சேலம் மாவட்டத்தில் ரூ.20 கோடியில் பல்நோக்கு விளையாட்டு வளாகம், தென்காசி மாவட்டத்தில் உள்ள பட்டக்குறிச்சி கிராமத்தில் ரூ.15 கோடியில் மாவட்ட விளையாட்டு வளாகம் போன்ற பல்வேறு வசதிகளை அமைத்து வருகிறது.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (TN Champions Foundation) மூலம் 585 விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும், உயர்நிலைப் போட்டிகளில் பங்கேற்றல் மற்றும் மருத்துவச் செலவு உட்பட பல்வேறு செலவினங்களுக்கும் ரூ. 13.33 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு விளையாட்டினை ஊக்குவிக்க மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக, 44வது செஸ் ஒலிம்பியாட், சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (WTA), ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023, ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி 2023, சென்னை செஸ் கிராண்ட்மாஸ்டர்ஸ் 2023, கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள் 2023, ATP சேலஞ்சர் 100 சர்வதேச ஆண்கள் டென்னிஸ் போட்டி, தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்-2024, சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் 2024, முதலமைச்சர் கோப்பைகள், 76வது தேசிய டிராக் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் 2024 போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையை மேம்படுத்திடவும், விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (FICCI) இந்தியாவின் விளையாட்டினை மேம்படுத்தி வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, இந்தியாவின் விளையாட்டு திறன், தேசிய மற்றும் சர்வதேச அளவில் உயர்த்துவதை உறுதிசெய்ய, மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு, முதலீடு போன்றவற்றில் FICCI பங்களிக்கிறது. மேலும், விளையாட்டில் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வரும் பல்வேறு விளையாட்டு மேம்பாட்டு நடவடிக்கைகளால் இந்திய விளையாட்டு விருதுகள் 2024-இல், விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் தமிழ்நாட்டின் சிறந்த பங்களிப்பை FICCI அங்கீகரித்து, “விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்” என்ற விருதை தமிழ்நாட்டிற்கு வழங்கியுள்ளது.

இவ்விருதை FICCI விளையாட்டு குழு மற்றும் ஜி.எம்.ஆர் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர்
பி.கே.எஸ்.வி.சாகர் மற்றும் FICCI விளையாட்டு குழுவின் இணை தலைவர் அமித் பல்லா ஆகியோர் வழங்க, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா இ.ஆ.ப., மற்றும் தமிழ்நாடு விளையாட்டுத் மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி இ.ஆ.ப., ஆகியோர் பெற்றுக்கொண்டனர். முதலமைச்சரிடம் விருதினை காண்பித்து வாழ்த்து பெற்ற நிகழ்வில், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர். அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., ஆகியோர் உள்ளனர்.

The post 2024-ஆம் ஆண்டிற்கான இந்திய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ்நாட்டிற்கு விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலம்” விருது வழங்கி கெளரவம்..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Indian Sports Awards ,Chennai ,Indian Sports Awards for 2024 ,Chief Minister ,Mu. K. Stalin ,Deputy Chief Minister Assistant Secretary ,Stalin ,Indian Sports Awards for ,
× RELATED கனமழை காரணமாக தமிழ்நாடு,...