×

ஏற்காட்டில் 3வது நாளாக கொட்டித்தீர்த்த கனமழை; திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலை துண்டிப்பு

சேலம்: ஏற்காட்டில் 3வது நாளாக கொட்டித்தீர்த்த கனமழையால், திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டது. இதனால், நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக, கடந்த 4 நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நாள்தோறும் பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ஏற்காட்டில் பெய்த மழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டு, மரங்களும், மின்கம்பங்களும் சாலையில் விழுந்தன. இதனையடுத்து அதனை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்நிலையில் சேலத்தில் நேற்றிரவு திடீரென மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இடியுடன் பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதேசமயம் ஏற்காட்டில் நேற்று 3வது நாளாக கனமழை கொட்டித்தீர்த்தது. கடந்த 30ம் தேதி 144.4 மிமீ, நேற்று முன்தினம் 238 மிமீ மற்றும் நேற்று 98.2 மிமீ என மொத்தம் 48 செ.மீ மழை கொட்டித்தீர்த்தது. ஏற்காடு வனப்பகுதியில் பெய்த மழைநீரால் அடிவாரத்தில் உள்ள ஏரிகளை நிரப்பியது. பின்னர் அங்கிருந்து வெளியேறி திருமணிமுத்தாற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.

குறிப்பாக அணை மேட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட், கொண்டலாம்பட்டி, உத்தமசோழபுரம், வீரபாண்டி என வழி நெடுகிலும் ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி செல்கிறது. இதனிடையே, கந்தம்பட்டி அருகே நேற்றிரவு திருமணிமுத்தாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தால், சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தண்ணீரால் மூழ்கியது. இதனால், அப்பகுதியில் உள்ள ஷோரூம்களில் நிறுத்தப்பட்டிந்த 10க்கும் மேற்பட்ட கார்கள் தண்ணீரில் மிதந்தன. அப்பகுதியில் உள்ள இளைஞர்கள், கார்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேசமயம், நள்ளிரவில் சேலத்திலிருந்து பழனிக்கு புறப்பட்ட அரசு பஸ், வெள்ளத்தில் சிக்கி பாதியில் நின்றது. இதனையடுத்து பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டு மாற்று வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், கந்தம்பட்டி பகுதியில் உள்ள பெட்ேரால் பங்க்குகள், கார் ஷோரூம்கள் மற்றும் இதர கடைகளில் தண்ணீர் புகுந்தது. தேசிய ெநடுஞ்சாலையிலும் இடுப்பளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து தற்காலிகமாக அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக பட்டர்பிளை பாலத்திற்கு அடியிலும், கந்தம்பட்டி மேம்பாலத்திலும் என சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதேபோல் சேலத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. குறிப்பாக, சேலம் புது பஸ் ஸ்டாண்ட்டிற்குள் குளம் போல தண்ணீர் தேங்கி நின்றதால் பயணிகள் பெரும் சிரமம் அடைந்தனர். மேலும் மாநகராட்சி 26வது வார்டுக்குட்பட்ட குப்தா நகர், சினிமா நகர், சின்னேரி வயல்காடு ஆகிய பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் விடிய, விடிய பாத்திரங்களை கொண்டு, தண்ணீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

The post ஏற்காட்டில் 3வது நாளாக கொட்டித்தீர்த்த கனமழை; திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு; சேலம்-பெங்களூர் நெடுஞ்சாலை துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Yirat ,Thirumanimuthathar ,Salem-Bangalore ,Salem ,Uttarat ,Salem-Bangalore National Highway ,Thirumanimutha ,Benjal ,Bengal ,Tamil Nadu ,Thirumanimuthal ,Salem-Bangalore highway ,Dinakaran ,
× RELATED சாணார்பட்டி அருகே...