கோபி: ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் சாலையோரம் மகா மாரியம்மன் கோயில் கட்டப்பட்டு வழிபாடு நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஈரோட்டில் இருந்து மேட்டுப்பாளையம் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது.
முதல் கட்டமாக சித்தோட்டில் இருந்து கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு வரை 30 கி.மீ தூரத்திற்கு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சுமார் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் வேரோடு அகற்றப்பட்டும், சாலையோரம் இருந்த கோயில்கள் இடித்தும் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கோபி அருகே உள்ள கரட்டடிபாளையத்தில் சாலை விரிவாக்க பணிக்கு இடையூறாக இருந்த மகா மாரியம்மன் கோயில் இடித்து அகற்ற முடிவு செய்ய செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் நிவாரண தொகையாக ரூ.30 லட்சம் கோயில் நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது.
ஆனால் கோயில் நிர்வாகிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து இரு தரப்பினரும் அதே பகுதியில் தனியார் இடத்தில் தனித்தனியாக கோயில் அமைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இது தொடர்பாக ஒரு பிரிவினர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதை அடுத்து கோயிலில் இருந்த மகா மாரியம்மன், விநாயகர், நாகர் உள்ளிட்ட சாமி சிலைகள், உண்டியல்கள் என அனைத்தும் கடந்த சில நாட்களுக்கு முன் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுத்து செல்லப்பட்டு பாரியூரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து கோயிலை இடித்து அகற்ற நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 2 ராட்சத பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் சுவர் இடிக்கும் இயந்திரம் மூலமாக கோயில் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.
கோயில் இடிக்கப்பட்டதை தொடர்ந்து கோபி சத்தி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு அனைத்து வாகனங்களும் ஒரு வழியாக அனுமதிக்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக கோயில் இடிப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வந்த நிலையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயில் இடித்து அகற்றப்பட்டது.
The post சாலை விரிவாக்க பணி; கோபியில் கோயில் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.