×

பெஞ்சல் புயல் எதிரொலி: வெளுத்து வாங்கிய மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சேலம், டிச.3: சேலம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு, நிவாரண மையங்களில் தங்க வைக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். சேலம் மாவட்டத்தில், பெஞ்சல் புயல் காரணமாக, கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளான ஏற்காடு, ஆத்தூர், வாழப்பாடி, கெங்கவல்லி, வீரகனூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், இடைப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை கொட்டியது. குறிப்பாக ஏற்காட்டில் மழை கொட்டி தீர்த்தது. மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டு, ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து மின்கம்பங்கள் உடைந்து சேதமானதால், 20க்கும் மேற்பட்ட மலைகிராமங்களில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, மின்வாரியத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் மாநகரில் நேற்று காலையில் சிறிது நேரம் மழை பெய்தது. பின்னர், மேகமூட்டம் விலகி லேசாக வெயில் அடித்தது. பின்னர், மாலையில் கருமேகம் சூழ்ந்தது. மாலை 6.30 மணியளவில் மாநகரில் மழை கொட்டியது. கொட்டி தீர்த்த மழையால், மாநகரில் தாழ்வான பகுதிகளான சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள சின்னேரிவயக்காடு, சினிமா நகர், கோரிமேடு ஏடிசி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது. இப்பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு, மாநகராட்சி அதிகாரிகள் நிவாரண மையங்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகினர்.

சிறிது நேர இடைவெளிக்கு பின்னர், மீண்டும் கொட்டிய மழை தொடர்ந்து 3 மணி நேரம் பெய்தது. இதனால், சேலம் புதிய பஸ் ஸ்டாண்டிற்குள் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால், வார விடுமுறை முடிந்து தங்களது பணியிடங்களுக்கு திரும்புவதற்காக வந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர். அதே போல், கிச்சிப்பாளையம் மெயின் ரோடு, நாராயணநகர், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. மழையின் காரணமாக இரவில் கடும்குளிர் வீசியதால் பொதுமக்கள் சிரமப்பட்டனர். வேலை முடிந்து வீடுகளுக்கு சென்றவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர். தொடர் மழையால், சேலம் பொன்னம்மாபேட்டை வாய்க்கால்பட்டறை பகுதியில் உள்ள அல்லிக்குட்டை ஏரி நிரம்பியது. ஏரியில் இருந்து உபரி நீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஏரி நிரம்பியதால், அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. இதேபோல், திருமணி முத்தாற்றில் இருகரைகளையும் தொட்டப்படி வெள்ளநீர் பெருக்கெடுத்து சென்றது. சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு விபரம் வருமாறு(மில்லி மீட்டரில்): சேலம்-59, ஏற்காடு -238, வாழப்பாடி 58, ஆணைமடுவு-100, ஆத்தூர்-56, கெங்கவல்லி- 60, தம்மம்பட்டி-64, ஏத்தாப்பூர்-80, கரியகோவில்-149, வீரகனூர்-63, நந்தக்கரை-25, சங்ககிரி-24.4, இடைப்பாடி 20.4, மேட்டூர்-44, ஓமலூர்-99, டேனீஷ்பேட்டை 96 என பதிவானது. கடந்த இரு நாட்களாக பெய்த கனமழை, பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தினாலும், பல விவசாயிகளுக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது. மழையால் கிணறு, போர்வெல்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் எதிர்வரும் நாட்களில் விவசாய பணிகள் நல்லமுறையில் இருக்கும் என்று விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலத்தை சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறியதாவது: பெஞ்சல் புயலால் சேலம் மாவட்டம் முழுவதும், பெய்த மழையால் பல ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கனவே 50 சதவீதம் தண்ணீர் தேங்கி இருந்த 30 சதவீதம் ஏரிகள், தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 30 சதவீதம் தண்ணீர் தேங்கிய ஏரிகளில் 60 சதவீதம் தண்ணீரும், 10 சதவீதம் மற்றும் சுத்தமாக தண்ணீர் இல்லாமல் இருந்த ஏரிகளுக்கு 30 முதல் 40 சதவீதம் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. பல கிணறுகளில் கைக்கு எட்டும் அளவில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. தற்போது தேங்கியுள்ள தண்ணீரால் எதிர்வரும் மாதங்களில், விவசாய பணிகள் சிறப்பாக இருக்கும். கோடையில் விவசாயப்பணிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பெஞ்சல் புயல் எதிரொலி: வெளுத்து வாங்கிய மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Benjal storm reverberations ,Salem ,Salem district ,Benjal storm reverberation ,Dinakaran ,
× RELATED காதலி வீட்டில் டிரைவரை அடித்து கொன்றதாக உறவினர்கள் மறியல்