கெங்கவல்லி, டிச.2: பெஞ்சல் பயுல் எதிரொலியாக, சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதலே பரவலாக மழை பெய்தது. வீரகனூர் பேரூராட்சி பகுதிகளில் விட்டு விட்டு பெய்த மழையால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வீரகனூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. கூலி தொழிலாளியான இவர், குடும்பத்தினருடன் சிமென்ட் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் விடிய, விடிய பெய்த மழைக்கு, நேற்று அதிகாலை அண்ணாதுரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வெளிப்பக்கமாக சுவர் விழுந்ததால், வீட்டில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அண்ணாதுரை உள்ளிட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதே வேளையில், சுவரின் ஒரு பகுதி வீட்டிற்குள் விழுந்ததில் அங்கிருந்த பீரோ, பிரிட்ஜ், டைனிங் டேபிள், ட்ரெஸ்ஸிங் டேபிள் உள்ளிட்ட ₹30 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தது.
இதேபோல், வீரகனூர் புத்தர் சிலை பகுதியில் வசித்து வரும் அம்பிகா, கெங்கவல்லி 74.கிருஷ்ணாபுரம் கிழக்கு வீதியில் வசிக்கும் மாணிக்கம், ஆத்தூர் மெயின்ரோடு பகுதியில் வசிக்கும் ஊமையன், நடுவலூர் பகுதியில் வசிக்கும் பிலிப்ஸ், ஆணையாம்பட்டியில் திருச்சி மெயின் ரோட்டில் வசிக்கும் காதர் பாஷா ஆகியோரது வீடுகளில் சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட விஏஓக்கள் ஆய்வு செய்து, நிவாரணத் தொகை வழங்க பரிந்துரை செய்துள்ளனர்.
தொடர் மழை காரணமாக வீரகனூர், லத்துவாடி, கிழக்கு ராஜாபாளையம், கவர்பனை, பின்னனூர், திட்டச்சேரி உள்ளிட்ட ஊர்களில், சில நாட்களில் கதிர் விடும் நிலையில் இருந்த மக்காச்சோளம் அடியோடு சாய்ந்து சேதமடைந்தது.
அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கெங்கவல்லி அருகே கொண்டையம்பள்ளியில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 170 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து ஏரி நிரம்பி வழிகிறது. நடுவலூர் செட்டிக்குளம் பகுதியில், பலத்த காற்றுக்கு திருச்சி நெடுஞ்சாலையில் புளியமரம் சாய்ந்து விழுந்தது. இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன. இதுகுறித்த தகவலின்பேரில், கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன் சம்பவ இடம் சென்று, பொக்லைன் கொண்டு மரத்தை அப்புறப்படுத்தும் பணியை முடுக்கி விட்டார்.
The post 6 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது appeared first on Dinakaran.