பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கம், ராஜகோபாலன் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சொகுசு காரில் இருந்து மிகுந்த துர்நாற்றம் வீசுவதாக வளசரவாக்கம் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து வளசரவாக்கம் காவல் உதவி ஆணையர் செம்பேடு பாபு தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காரை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அதில் உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது.
இதையடுத்து அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காருக்குள் இறந்த கிடந்தது சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் என்பதும், இறந்து ஒரு வாரம் ஆகியிருக்கலாம் எனவும், காருக்குள் மது பாட்டில் மற்றும் டம்ளர் இருந்தது தெரிய வந்தது. மேலும் இந்த பகுதியில் பழுதான கார்கள் சரி செய்யும் மெக்கானிக் கடை உள்ள நிலையில் பழுதை சரி செய்ய வந்த சொகுசு காரை நிறுத்துவதற்கு இடமில்லாததால் இந்த பகுதியில் நிறுத்தி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
காருக்குள் சடலமாக கிடந்த நபர் யார், காருக்குள் மதுபோதையில் படுத்திருக்கும்போது உயிரிழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு காருக்குள் மர்ம நபர்கள் வீசி சென்றார்களா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களில் காணாமல் போன நபர்கள் குறித்து ஏதேனும் புகார்கள் வந்துள்ளதா என வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீஸ் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு காரில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The post வளசரவாக்கத்தில் பரபரப்பு சொகுசு காரில் ஆண் சடலம்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.