பொன்னேரி: மீஞ்சூரில் செல்போன் கடையை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன், பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூரைச் சேர்ந்தவர் முகமது அல்தாப் (48). இவர் மீஞ்சூர் அறியன்வாயல் பஜாரில் செல்போன் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் வழக்கம்போல் இரவு 8 மணிக்கு கடையை பூட்டிச் சென்றார். நேற்று காலை அருகில் உள்ள டீக்கடைக்காரர் வந்து பார்த்தபோது செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கடையின் உரிமையாளர் முகமது அல்தாப்பிடம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் அல்தாப் கடைக்கு வந்து பார்த்தபோது கடையில் இருந்த 14 விலை உயர்ந்த செல்போன்கள், ஸ்பீக்கர், ப்ளூடூத் உள்ளிட்ட உதிரிபாகங்கள் உள்பட ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் விற்பனை பணம் ரூ.47,000 திருடு போயிருந்தது. இதுகுறித்து அல்தாப் மீஞ்சூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மீஞ்சூர் எஸ்ஐக்கள் செந்தில், பழனிவேல் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கைரேகை நிபுணர் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டு கடையில் பதிந்து இருந்த கைரேகைகள ஆய்வு செய்தனர். இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், பணம் திருட்டு appeared first on Dinakaran.