* வரும் 5ம் தேதி காணொளியில் ஆஜராக உத்தரவு
புதுடெல்லி: டெல்லி காற்று மாசு விவகாரத்தில் உத்தரவை பின்பற்றாத தலைமைச் செயலாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசுபாடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி அபயா எஸ் ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், \” இந்த விவகாரத்தில் டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், அரியானா மற்றும் உத்தரப்பிரதேச ஆகிய மாநிலங்கள் கட்டுமான பணியாளர்களுக்கு உதவித்தொகை வழங்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அந்த அரசுகள் சரியாக பின்பற்றவில்லை.
எனவே மேற்கண்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் அடுத்த விசாரணையின் போது கண்டிப்பாக வீடியோ கான்பரென்சிங் முறையில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். வரும் 5ம் தேதி அதாவது வியாழக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அவர்கள் ஆஜராக வேண்டும். இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்பட்டால் தான் காற்று மாசுவின் தீவிரம் அவர்களுக்கு புரியும். குறிப்பாக பணம் வழங்கப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் காட்டப்பட வேண்டும். .அவ்வாறு பணம் வழங்கப்படவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும். நவம்பர் 25ம் தேதியிலிருந்து ஒரே ஒரு நாள் மட்டுமே டெல்லியில் காற்று மாசுபாடு குறைந்துள்ளது. அதன் பிறகு காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்தே காணப்படுகிறது.
இதுபோன்ற சூழலில் நாங்கள் இப்போது கட்டுப்பாடுகளை தளர்த்த அனுமதிக்க முடியாது. வரும் 5ம் தேதி நாங்கள் காற்றின் தரம் குறித்து ஆய்வு செய்து, காற்று மாசுபாடு தொடர்ந்து குறைந்து வந்தால் அடுத்த கட்ட உத்தரவை பிறப்பிப்போம் .காற்று மாசுபாடு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதில் காவல்துறை, மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்பது தெளிவாக தெரியவந்துள்ளது. இது உச்ச நீதிமன்றத்திற்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஒருங்கிணைப்பை கண்காணிக்க வேண்டியது காற்று தர மேலாண்மை ஆணையத்தின் கடமை ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் இருந்து ஜனவரி மாதம் வரை டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்சனை நீடிக்கிறது. எனவே இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டியுள்ளது. பயிர் கழிவுகள் எரிப்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்களில் நிரந்தர தீர்வு காணப்பட வேண்டியதும் அவசியமாக இருக்கிறது. எனவே அதுதொடர்பான விவரங்களை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் இரண்டு நாட்களில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வரும் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
The post டெல்லி காற்று மாசுபாடு விவகாரம்; நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்: தலைமை செயலாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை appeared first on Dinakaran.