இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இரு குழுக்களுக்கு இடையே வன்முறை நடைபெற்று வரும் நிலையில், கடந்த நவம்பர் 25ம் தேதி காங்போக்பி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் மாயமானார். கடந்த நவம்பர் 15 மற்றும் 16ம் தேதிகளில் ஜிரிபாம் மாவட்டத்தில் காணாமல் போன மூன்று குழந்தைகள் மற்றும் மூன்று பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர், இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு உள்ளிட்ட பள்ளத்தாக்கு மாவட்டங்களில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகள் மற்றும் பங்களாக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதனால் மேற்கண்ட அடுத்தடுத்த சம்பவங்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
தொடர் பதற்றம் நிலவி வருவதால் கடந்த 17 நாட்களாக செல்போன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜிரிபாம் மாவட்டம் உட்பட ஒன்பது மாவட்டங்களில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் நிறுத்தம் மேலும் இரண்டு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, தவுபால், பிஷ்ணுபூர், காக்ச்சிங் மற்றும் ஜிரிபாம் ஆகிய ஆறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது. இருப்பினும், எந்தவொரு கூட்டம் அல்லது பேரணிக்கு அனுமதியில்லை’ என்று தெரிவித்துள்ளது.
The post மணிப்பூரில் பதற்றம் நிலவுவதால் இணைய சேவை நிறுத்தம் நீடிப்பு appeared first on Dinakaran.