×
Saravana Stores

ஜாமீனை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு;அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முகாந்திரம் இல்லாத மனுக்கள் தாக்கல்.! உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம்

புதுடெல்லி: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தனக்கு எதிராக முகாந்திரம் இல்லாத மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பிலான வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக அமலாக்க துறையினர் கடந்தாண்டு ஜூன் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பல கட்ட விசாரணைக்கு பின்னர் கடந்த செப்டம்பர் 26ம் தேதி, செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக வித்தியாகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவானது நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கும்போது, அமைச்சராக பதவியேற்க மாட்டார் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் ஜாமீன் கிடைத்த ஒருசில தினங்களில் அமைச்சராக பதவியேற்று கொண்டார். இது விசாரணையை பாதிப்படைய செய்யும். எனவே ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என்றார். செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர், ‘இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் மற்றும் காழ்ப்புணர்ச்சி காரணமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக விசாரணை பாதிக்கப்படுகிறது என்றால் நீதிமன்றத்தை அமலாக்க துறையினர் நாடி இருப்பார்கள். அவர்கள் எதுவும் செய்யவில்லை. இதுபோன்ற முகாந்திரம் இல்லாத மனுக்களால் அரசியல் ரீதியிலும் அழுத்தங்கள் உருவாகிறது. எனவே இதுபோன்ற மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”செந்தில் பாலாஜிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள போது அவர் எப்படி அமைச்சரானார்.

குறிப்பாக உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியவுடன் அவர் அமைச்சராகி உள்ளார். இதனால் வழக்கில் தொடர்புடைய சாட்சியங்களுக்கு அழுத்தம் ஏற்படாதா? இந்த விவகாரத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது புரியவில்லை. குறிப்பாக வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சியங்கள் உள்ள போது இது எப்படி சாத்தியம். இருப்பினும் செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய கோரிய இந்த மனு மீது விசாரணை நடத்துவோம். அப்போது சாட்சியங்களுக்கு ஏதேனும் அழுத்தம் கொடுக்கிறாரா என்பது குறித்தும் பரிசீலனை செய்யப்படும். இருப்பினும் இந்த விவகாரத்தில் நோட்டீஸ் எதுவும் பிறப்பிக்க போவது கிடையாது. வழக்கின் விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

The post ஜாமீனை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு;அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முகாந்திரம் இல்லாத மனுக்கள் தாக்கல்.! உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பு வாதம் appeared first on Dinakaran.

Tags : Senthil Balaji ,Supreme Court ,NEW DELHI ,Sentil Balaji ,Dinakaran ,
× RELATED ஜாமீன் மனு நிராகரிக்கும் போது விசாரணை...