வாஷிங்டன் : சட்டவிரோத துப்பாக்கி மற்றும் வரி மோசடி வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ள தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 46வது அதிபராக கடந்த 2021ம் ஆண்டு முதல் பதவியில் இருந்து வருபவர் ஜோபிடன், அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு ட்ரம்ப் , வரும் ஜனவரி 20ம் தேதி பதவியேற்க உள்ளார். அதுவரை ஜோபிடன் பதவியில் நீடிப்பார். இதற்கிடையே சட்ட விரோதமாக துப்பாக்கி வாங்கியது தொடர்பாக 3 வழக்குகளில் அமெரிக்க அதிபர் ஜோபிடனின் மகன் ஹண்டர் பிடன் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன் தீர்ப்பு அளித்தது.
மேலும் ஹண்டர் பிடன் 14 லட்சம் டாலர் வரை வருமான மோசடி செய்த வழக்கிலும் அவர் குற்றவாளி என மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த 2 வழக்குகளிலும் ஹண்டர் பிடனுக்கான தண்டனை விவரங்களை சம்பந்தப்பட்ட நீதிமன்றங்கள் இம்மாதம் வழங்க உள்ளன. இந்த நிலையில் தனது மகன் ஹண்டர் பிடனுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோபிடன் அறிவித்துள்ளார். அதிபரின் இந்த நடவடிக்கை அமெரிக்க அரசியலில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று, என் மகன் ஹண்டருக்கு பொது மன்னிப்பு வழங்கி கையெழுத்திட்டேன். நான் பதவியேற்ற போது நீதித்துறையின் முடிவெடுப்பதில் தலையிட மாட்டேன் என்று சொன்னேன். ஆனால் எனது மகன் மீதான வழக்கில் அரசியல் இருக்கிறது. இதனால் நீதி நிலைநாட்டப்படவில்லை, இதன் காரணமாகவே நான் இப்போது இந்த முடிவை எடுத்துள்ளேன். ஒரு தந்தையாக அமெரிக்க அதிபராக நான் ஏன் இந்த முடிவை எடுத்தேன் என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என்று அதில் கூறியுள்ளார். ஜோபிடனின் முடிவை கடுமையாக விமர்சித்துள்ள ட்ரம்ப், ஜோபிடன் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.
The post சட்டவிரோத துப்பாக்கி,வரி மோசடி வழக்குகளில் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ள தனது மகனுக்கு பொது மன்னிப்பு வழங்கினார் அதிபர் ஜோபிடன் appeared first on Dinakaran.