தொழிலாளர்கள் சம்பளம் அதிகரிக்கவில்லை பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமாக சரிகிறது: புள்ளிவிவரங்களுடன் காங். விளக்கம்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று விடுத்த அறிக்கை: நடப்பாண்டின் ஜூலை-செப்டம்பர் மாதத்திற்கான ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) புள்ளிவிவரங்களை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அவை எதிர்பார்த்ததை விட மிக மோசமாக இருந்தன. இந்தியா, 5.4% பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, நுகர்வு 6% ஆக அதிகரித்துள்ளது. ஜிடிபி கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ஆனால், உயிரியல் அல்லாத பிரதமரும், அவரது ஆதரவாளர்களும் இந்த மந்தநிலைக்கான காரணங்களை வேண்டுமென்றே கவனிக்காமல் கண்மூடித்தனமாக இருக்கிறார்கள்.

மும்பையைச் சேர்ந்த முன்னணி நிதித் தகவல் சேவை நிறுவனமான இந்தியா ரேட்டிங்ஸ் அண்ட் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் தேசிய அளவில் ஒட்டுமொத்த உண்மையான ஊதிய வளர்ச்சி 0.01% மட்டுமே. இதே காலகட்டத்தில் அரியானா, அசாம், உபி தொழிலாளர்களின் ஊதியம் குறைந்துள்ளது. அப்படியெனில், சராசரி இந்தியர்களின் வாங்கும் திறன் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியதை விட இன்று குறைவானதாக இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் வளர்ச்சி மந்தநிலைக்கு இதுவே முக்கிய காரணம்.

தொழிலாளர்கள் ஊதியம் 2019-2024க்கு இடையில் சரிவை கண்ட நிலையில், 2014-2023க்கு இடையில் எந்த வளர்ச்சியும் இல்லாமல் தேக்கமடைந்துள்ளது. விவசாய அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களை பார்க்கையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில், விவசாயத் தொழிலாளர்களின் ஊதியம் ஒவ்வொரு ஆண்டும் 6.8% வளர்ச்சியடைந்தது. தற்போது மோடியின் ஆட்சியில், ஒவ்வொரு ஆண்டும் மைனஸ் 1.3% ஆக குறைந்துள்ளது.

இதே போல, செங்கல் சூளைத் தொழிலாளர்களின் ஊதியம் 2014-2022க்கு இடையில் குறைந்துள்ளது. இப்படி தொழிலாளர் வர்க்கத்தின் சம்பளம் உயராததால், நுகர்வு பாதிக்கப்பட்டு, நாட்டின் நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார திறன் வேகமாக அழிந்து வருகிறது. இந்த கொடூரமான உண்மை இன்னும் எவ்வளவு காலம் புறக்கணிக்கப்படும்? ஆனால் பிரதமர் மோடியும், அவரது சகாக்களும் பெருமை பேசுவதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர்.இவ்வாறு கூறி உள்ளார்.

* அதானிக்கு எதிராக எப்படி இருக்க முடியும்?
அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டில், எந்த விசாரணையிலும் இந்திய அரசு ஒரு பகுதியாக இருக்கவில்லை என வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து நேற்று கருத்து தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், ‘‘அரசு தன்னைப் பற்றிய குற்றச்சாட்டின் ஒருபகுதியாக எப்படி இருக்க முடியும்?’’ என கிண்டல் செய்துள்ளார்.

The post தொழிலாளர்கள் சம்பளம் அதிகரிக்கவில்லை பொருளாதார வளர்ச்சி விகிதம் வேகமாக சரிகிறது: புள்ளிவிவரங்களுடன் காங். விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: