அரபிக்கடலில் கடத்தப்பட்ட ரூ.3000 கோடி போதைபொருள் பறிமுதல்: இந்தியா-இலங்கை கடற்படை கூட்டு நடவடிக்கை

புதுடெல்லி: இந்தியா- இலங்கை கடற்படையின் கூட்டு நடவடிக்கையின் காரணமாக படகுகளில் கடத்தி வரப்பட்ட ரூ.3000 கோடி மதிப்புள்ள 500 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரபிக்கடலில் இலங்கை நாட்டு கொடியுடன் கூடிய மீன்பிடி படகுகளில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படை அதிகாரிகள் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் இந்திய கடற்படை துரிதமாக மேற்கொண்ட நடவடிக்கையில் அந்தப் படகுகள் தடுக்கப்பட்டு மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

கடந்த 25ம் தேதி இந்திய கடற்படை மேற்கொண்ட இந்த நடவடிக்கையில் போதை கடத்தலில் ஈடுபட்ட கடத்தல்காரர்கள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். குருகிராமில் உள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான தகவல் மையத்திலிருந்து பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், இந்திய கடற்படைக்கு சொந்தமான விமானம் மூலம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த தேடுதல் நடவடிக்கைகளில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலும் ஈடுபடுத்தப்பட்டது.

இந்த தேடுதல் நடவடிக்கையின் போது இலங்கை கடற்படையால் தொடர்ந்து வழங்கப்பட்ட தகவலின் பேரில் ரோந்து விமானம் மூலம் இரண்டு படகுகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு அவை இடைமறிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் 500 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. கடத்தி வந்த போதை பொருளின் மதிப்பு ரூ.3000 கோடி என்று கூறப்படுகிறது. இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை இரு நாடுகளின் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் கடற்படையின் கூட்டு செயல்பாடுகளை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

* அந்தமானில் சிக்கிய போதை கடத்தல்காரர்களிடம் போனில் பேசியது யார்?
கடந்த 26ம் தேதி அந்தமான் கடலில் மீன் பிடி படகில் கடத்தி வரப்பட்ட 6 டன் எடை கொண்ட தடை செய்யப்பட்ட மெத்தாம்பேட்டமைன்போதை பொருளை கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு ரூ.36 ஆயிரம் கோடி. இது மியான்மரில் இருந்து தாய்லாந்துக்கு கடத்தி செல்லப்பட்ட போது பிடிபட்டது.இதில் மியான்மரை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து அந்தமான் போலீஸ் டிஜிபி ஹர்கோபிந்தர் சிங் தாலிவால் கூறுகையில்,‘‘போதை கடத்தல் காரர்கள் அந்தமானில் 2 இடங்களில் உள்ள சிலரிடம் தொலைபேசியில் பேசியுள்ளனர். போதை பொருள் இந்தியாவுக்கு கொண்டுவரப்படாவிட்டாலும் எதற்காக இந்திய நபர்களிடம் அவர்கள் பேசினார்கள் என்பது குறித்து விசாரிக்கிறோம். ஒரு வேளை கடத்தப்பட்ட போதை பொருளின் ஒரு பகுதியை அந்தமானில் இறக்குவதற்கு அவர்கள் திட்டமிட்டிந்தனரா என்பது குறித்து விசாரிக்கிறோம்’’ என்றார்.

The post அரபிக்கடலில் கடத்தப்பட்ட ரூ.3000 கோடி போதைபொருள் பறிமுதல்: இந்தியா-இலங்கை கடற்படை கூட்டு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: