பாஜ மாநில தலைவர் அறிவிப்பு மகாராஷ்டிராவில் டிச.5ல் புதிய அரசு பதவியேற்கும்: புதிய முதல்வர் குழப்பம் தீரவில்லை

மும்பை: மகாராஷ்டிராவில் வரும் 5ம் தேதி மகாயுதி கூட்டணியின் புதிய அரசு பதவியேற்கும் என்று பாஜ மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே உறுதி செய்துள்ளார். ஆனாலும், யார் புதிய முதல்வர் என்கிற குழப்பம் இதுவரையிலும் தீரவில்லை. மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், பாஜ, ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

தேர்தல் முடிவு வெளியாகி ஒருவாரமாகியும் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிசை முதல்வராக்க பாஜ முயற்சிக்கிறது. இதற்கு அஜித் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால், தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதவியை விட்டுத்தர மறுப்பதாக கூறப்படுகிறது. அமித்ஷா அழைத்துப் பேசியும் தீர்வு எட்டப்படாததால், புதிய அரசு பதவியேற்காமல் உள்ளது. காபந்து முதல்வராக ஷிண்டே நீடிக்கிறார்.

இந்நிலையில், முதல்வர் குழப்பம் தீராத நிலையில், மும்பையில் பாஜ மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே நேற்று அளித்த பேட்டியில், ‘‘மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியின் புதிய அரசு வரும் 5ம் தேதி பதவியேற்கும். பதவியேற்பு விழா தெற்கு மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடக்கும். இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்’’ என்றார். பட்நவிஸ், முதல்வராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பாஜ கட்சியினர் கூறுகின்றனர்.

பதவியேற்புக்கு முன்பாக பாஜ சட்டப்பேரவை கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை (டிச.2ம் தேதி) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகாயுதி கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் ரத்து செய்யப்பட்ட நிலையில், காபந்து முதல்வர் ஷிண்டே அவரது சொந்த கிராமமான சதாராவுக்கு திடீரென புறப்பட்டுச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. உடல் நிலை சரியில்லாததால் சொந்த கிராமத்தில் ஷிண்டே வுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளதாக சிவசேனா வட்டாரங்கள் தெரிவித்தன.

* 8 நாளாகியும் முதல்வர் பதவியேற்காதது ஏன்?
இது தொடர்பாக உத்தவ் சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவத் நேற்று அளித்த பேட்டியில், ‘‘தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 8 நாட்கள் ஆகியும் மகாராஷ்டிராவில் முதல்வர் இன்னும் பொறுப்பேற்கவில்லை. ஏன் இவ்வளவு சிக்கல்கள் நிகழ்கின்றன? மக்களின் தீர்ப்புக்கு மாறாக தேர்தல் முடிவு அமைந்து உள்ளது.

மகாராஷ்டிராவிலும் அரியானாவிலும் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்குப்பதிவு பல மடங்கு அதிகரித்ததே தேர்தலில் பாஜ கூட்டணியின் வெற்றிக்கு காரணம். மகாராஷ்டிராவில் 20ம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை 76 லட்சம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இந்த 76 லட்சம் வாக்குகள் என்ன ஆனது? அரியானாவிலும் 14 லட்சம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இது தான் மகாயுதி வெற்றிக்கு காரணம். எங்கள் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை’’ என்றார்.

The post பாஜ மாநில தலைவர் அறிவிப்பு மகாராஷ்டிராவில் டிச.5ல் புதிய அரசு பதவியேற்கும்: புதிய முதல்வர் குழப்பம் தீரவில்லை appeared first on Dinakaran.

Related Stories: