திருப்பூர், நவ.28: திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற பொதுமக்களை தடுத்து நிறுத்தியதால் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 55வது வார்டு பட்டுக்கோட்டையார் நகர் வடக்கு பகுதியில் 192 குடும்பங்கள் 38 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, வீடு இல்லாமல் வாழ்விடத்திற்காக குடி பெயர்ந்தவர்கள் என ஏராளமானோர் இங்கு வந்து பல ஆண்டுகளாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி கடந்த 38 ஆண்டு காலமாக அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
பல கட்ட போராட்டத்திற்குப்பிறகு திமுக ஆட்சி அமைந்த உடன் பட்டா வழங்குவதற்கான ஆவணங்கள் தயார் செய்து நில சீர்திருத்த ஆணையத்தின் கீழ் உள்ள எழிலகம் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஓராண்டுக்கு மேலாகியும் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் தங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்றைய தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நல சங்கம் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, நேற்று காலை கோரிக்கைகள் எழுதிய பதாகைகளுடன் மாவட்ட கலெக்டர்அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற பட்டுக்கோட்டையார் நகர் பகுதி பொதுமக்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், பொதுமக்கள் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் மற்றும் தெற்கு வட்டாட்சியர் மயில்சாமி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஊர்வலமாக செல்லக்கூடாது. காவல்துறை வாகனத்திலேயே மாவட்ட கலெக்டர் அலுவலகம் அழைத்துச்செல்லப்படும். பிரதிநிதிகள் மட்டும் கலெக்டரிடம் தங்கள் குறைகளை தெரிவித்து மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் ஒப்புக்கொண்டதையடுத்து காவல்துறையினரின் வாகனத்தில் பொதுமக்கள் அழைத்துச்செல்லப்பட்டனர். அதன்பிறகு பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தொடர்ந்து ஆவணங்கள் சென்னை அலுவலகத்தில் இருப்பது குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், ஜனவரி மாதத்திற்குள் அனைவருக்கும் பட்டா கிடைக்க வழிவகை செய்வதாகவும் உறுதி அளித்தார். தொடர்ந்து, பட்டா இல்லாததால் மின்சார வசதி மறுக்கப்பட்ட 27 வீடுகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கவும் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து பட்டுக்கோட்டையார் நகர் பகுதி பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். பொங்கலுக்கு முன்பாக பட்டா கிடைக்காத பட்சத்தில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து குடியிருப்பு நல சங்கத்தை கூட்டி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர். இந்த போராட்டத்தின் காரணமாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
The post கலெக்டர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்ற மக்களை தடுத்து நிறுத்தியதால் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.