×
Saravana Stores

போலீஸ் ஏட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

 

திருப்பூர், நவ.27: திருப்பூர் மாநகர் தாராபுரம் சாலை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (50). இவரது இருசக்கர வாகனம் திருட்டு போனதாக திருப்பூர் தெற்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 2006ம் ஆண்டு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் இவரது திருட்டு போன இருசக்கர வாகனம் கண்டு பிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, இருசக்கர வாகனத்தை பொன்னுசாமியிடம் ஒப்படைக்க அப்போது தெற்கு குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த போலீஸ் ஏட்டு கோவிந்தராஜ் (56), மற்றும் எஸ்.ஐ பழனிச்சாமி (70), ஆகியோர் ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். பணம் கொடுக்க விரும்பாத பொன்னுச்சாமி இது குறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸ் அறிவுறுத்தலின்படி கடந்த 4-9-2006 அன்று ரசாயனம் தடவிய நோட்டுக்களை ஏட்டு கோவிந்தராஜிடம் பொன்னுசாமி வழங்கி உள்ளார்.

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் எட்டு கோவிந்தராஜை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஏட்டு கோவிந்தராஜ்க்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி செல்லதுரை தீர்ப்பளித்தார். எஸ்ஐ பழனிச்சாமி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக செந்தில்குமார் வாதாடினார்.

The post போலீஸ் ஏட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Ponnusamy ,Tarapuram Road ,Tirupur South Crime Branch ,Police Station ,Dinakaran ,
× RELATED திருப்பூர்-கோவை எல்லையில் வேளாண்...