×
Saravana Stores

போரை நிறுத்த ஒப்பந்தம்; முடிவுக்கு வந்தது ஹிஸ்புல்லா – இஸ்ரேல் போர்: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் மக்கள்


பெய்ரூட்: இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லெபனான் மக்கள் நாடு திரும்ப தொடங்கி உள்ளனர். பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் படையினருக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர் இன்னும் நீடிக்கிறது. இந்த போரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேசமயம் ஏமனில் உள்ள ஹவுதி படையினரும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஹமாஸ் படையினருக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளனர். கடந்த மாதம் 8ம் தேதி இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதலை தொடங்கினர். இதையடுத்து லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் இருப்பிடங்களை குறி வைத்தும் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியது.

குறிப்பாக தெற்கு பெய்ரூட் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லா முகாம்களை குறி வைத்து கடந்த சில தினங்களாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் இதுவரை 3,800க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு விட்டனர். 15,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இதனிடையே இஸ்ரேல் – லெபனான் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் இணைந்து எடுத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்றுமுன்தினம் இரவு அறிவித்தார். இதுகுறித்து நெதன்யாகு கூறியதாவது: லெபனானை சேர்ந்த போராளி குழுவான ஹிஸ்புல்லாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா கொண்டு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஆதரவளிக்கிறேன். அதை அமைச்சரவை ஒப்புதலுக்கு பரிந்துரைக்கிறேன்.

அதன் மீது விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்படும். ஆனால் ஒப்பந்தங்களை மீறி எங்களை ஹிஸ்புல்லா தாக்கினால் நாங்கள் பதில் தாக்குதல் நடத்துவோம்” என எச்சரிக்கையுடன் தெரிவித்தார். இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு ஹிஸ்புல்லா அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று அதிகாலை முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக தெற்கு லெபனானில் இருந்து வௌியேறியவர்கள் மகிழ்ச்சியுடன் நாடு திரும்ப தொடங்கி உள்ளனர். தெற்கு லெபனான் முழுவதும் கார்கள் அணி வகுத்து நிற்பதை காண முடிகிறது. “14 மாதங்களுக்கு பிறகு சொந்த நாட்டுக்கு திரும்புகிறோம். அந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தையில்லை” என கொண்டாட்டங்களுடன் நாடு திரும்பிய மக்கள் உற்சாகத்தை வௌிப்படுத்தினர். இந்த போர் நிறுத்தத்துக்கு ஈரான் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இந்தியா வரவேற்பு
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தத்துக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வௌியுறவு அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தத்தை வரவேற்கிறோம். பதற்றத்தை தணிக்க கட்டுப்பாடு, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர பாதைக்கு திரும்ப இந்தியா எப்போதும் அழைப்பு விடுத்து வந்தது. தற்போதைய முன்னேற்றங்கள் பரந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழி வகுக்கும் என நம்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துருக்கி வரவேற்பு
இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து துருக்கி வௌியுறவு அமைச்சகம் வௌியிட்டுள்ள அறிவிப்பில், “போர் நிறுத்த ஒப்பந்தத்தை துருக்கி வரவேற்கிறது. இது நிரந்தர போர் நிறுத்தத்துக்கு வழிவகுக்கும். ஒப்பந்தங்களை இரு நாடுகளும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்.8 இஸ்ரேல் – லெபனான் போர் தொடக்கம்:
ஹிஸ்புல்லா அமைப்பினர் காசாவின் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது கடந்த மாதம் 8ம் தேதி தாக்குதல் நடத்தியது முதல் இஸ்ரேல் – லெபனான் மோதல் தொடங்கியது.
உயிரிழப்பு:
இந்த போரில் லெபனானில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 3,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். இஸ்ரேல் தரப்பில் 80 ராணுவ வீரர்களும், 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகினர்.
இருதரப்பு சேதங்கள்:
லெபனானில் வீடுகள் உள்பட சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இது அமெரிக்க டாலரில் 8.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேலில் 5,683 ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பலானி விட்டன.
இடம்பெயர்ந்தவர்கள்:
இஸ்ரேல் – லெபனான் போர் தொடங்கியது முதல் லெபனானில் இருந்து 1.2 மில்லியன் மக்களும், இஸ்ரேலில் இருந்து 46,500க்கும் அதிகமானோரும் இடம்பெயர்ந்துள்ளனர்.
தாக்குதல்கள்:
லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் 14,000 முறை பல்வேறு தாக்குதல்களை நடத்தி உள்ளது. அதேசமயம் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் 2,000க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.

The post போரை நிறுத்த ஒப்பந்தம்; முடிவுக்கு வந்தது ஹிஸ்புல்லா – இஸ்ரேல் போர்: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Hizbollah ,Israel ,Beirut ,Hezbollah ,Hamas ,Gaza Strip of ,Palestine ,Hizbullah ,Dinakaran ,
× RELATED லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையம் அருகே வான்வழி தாக்குதல்