விருதுநகர்/சிவகாசி, நவ.27: வருவாய்த்துறை அலுவலர்கள் இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருந்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும். 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கான உச்சவரம்பை 5 சதமாக குறைக்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் 25 சதமாக நிர்ணயம் செய்ய வேண்டும். வருவாய்த்துறையில் உள்ள பணியிடங்களை கலைக்க எடுக்கும் நடவடிக்கைகளை அரசு முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சிறப்பு பணிகள் மற்றும் சான்றிதழ் பணிக்கு வட்டம் தோறும் கூடுதல் துணை வட்டாட்சியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட 97 பணியிடங்களை உடனடியாக வழங்க வேண்டுமென்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று முதல் தொடர் பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளனர்.
இதனால் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலங்களில் பணிகள் முடங்கின. இதேபோல் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றும் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் தங்களது பணிகளை புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
The post வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணிப்பு போராட்டம் appeared first on Dinakaran.