விழுப்புரம், நவ. 26: விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கு மாவட்ட செயலாளர் உட்பட நாம் தமிழர் கட்சியினர் மேலும் 50 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு பிறகு நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்பில் உள்ளவர்கள் அக்கட்சியில் இருந்து படிப்படியாக விலகி மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர். இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியில் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த சுகுமார், மணிகண்டன், பூபாலன் மற்றும் தொகுதி செயலாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் அக்கட்சியிலிருந்து விலகினர். மேலும் கட்சியிலிருந்து விலகிய நிர்வாகிகள் சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தனர்.
இதனிடையே விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியவர்கள் அதிமுகவில் மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் இணைந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார், மத்திய மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் ராஜேஷ், செஞ்சி நகர தலைவர் சதீஷ், ஒன்றிய செயலாளர் மோகன்ராஜ், பாசறை செயலாளர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட முக்கிய பொறுப்பில் இருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் திண்டிவனத்தில் மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் இணைந்தனர்.
இதனிடையே நேற்று நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் பூபாலன் தலைமையில் விக்கிரவாண்டி தொகுதி பொறுப்பாளர் பாரூக், தொகுதி இணை செயலாளர் பிரசாந்த், நகர செயலாளர் அபூபக்கர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பிலிருந்த 50 பேர் அந்த கட்சியில் இருந்து விலகினர். பின்னர் விழுப்புரம் அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு சி.வி.சண்முகம் சால்வை அணிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் படிப்படியாக விலகி மாற்று கட்சியில் இணைந்து வருவதால் நாம் தமிழர் கட்சி கூடாரம் காலியாகி வருகின்றன.
The post விழுப்புரம் மாவட்டத்தில் கூடாரம் காலி நாதக மேற்கு மாவட்ட செயலாளர் உட்பட 50 பேர் விலகல் appeared first on Dinakaran.