×
Saravana Stores

அதானி முறைகேடு, மணிப்பூர் வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் அமளி : மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!!

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுவதால், மக்களவை, மாநிலங்களவை அமர்வுகள் நாளை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தொடரில், வக்பு வாரிய திருத்த மசோதா உட்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் மக்களவையில், மறைந்த உறுப்பினர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்திய சில நிமிடங்களில் அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடியதும் அதானி விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அவையை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க ஏற்கெனவே கொடுத்திருந்த நோட்டீஸைக் குறிப்பிட்து அனுமதி கோரினர். ஆனால் அவைத் தலைவர் ஓம் பிர்லா அத்தகைய விவாதங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் தொடர் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், தேசிய கீதம் இசைக்கப்பட்டு மாநிலங்களவை தொடங்கியது. அதானி முறைகேடு விவகாரம், மணிப்பூர் வன்முறை குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். குறிப்பாக அதானி விவகாரம் குறித்து மாநிலங்களவையில் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பினார். மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அவைத் தலைவர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே காரசார வாதம் நடைபெற்றது. தொடர்ந்து அமளி நீடித்ததால் மாநிலங்களவையும் இன்றைக்கு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இனி புதன்கிழமை (நவ.27) காலை 11 மணிக்குக் கூடும் என குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர் அறிவித்தார்.

The post அதானி முறைகேடு, மணிப்பூர் வன்முறை குறித்து எதிர்க்கட்சிகள் அமளி : மக்களவை, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Constitution Day ,Dinakaran ,
× RELATED இந்திய அரசியலமைப்பு நாள் உறுதிமொழி ஏற்பு