சென்னை: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலை வரை இடைப்பட்ட நேரத்தில் தற்காலிக புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது; நாகைக்கு 310 கி.மீ. தென்கிழக்கிலும், திரிகோணமலைக்கு 110 கி.மீ. கிழக்கு – வடகிழக்கிலும் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. புதுச்சேரிக்கு 410 கி.மீ. தென்கிழக்கிலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 480 கி.மீ. தெற்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது.
30-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து காரைக்கால் – மாமல்லபுரம் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. எதிர்காற்றின் தடை காரணமாக நகராமல் ஒரே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. வலுசேர்க்கும் காரணியாக பங்காற்றும் காற்று குவிதல் முறையே இல்லாததால் புயலாக வலுவடையவில்லை. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை முதல் நாளை காலை வரை இடைப்பட்ட நேரத்தில் தற்காலிக புயலாக மாறும். தற்காலிக புயலாக மாறி, தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கக் கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் நாளை அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நாளை மிக அதி கனமழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் நவ.30-ல் அதி கனமழைக்கு வாய்ப்பு என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று இரவு முதல் மழை தொடங்கும். 30-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கில் காற்று குவிவது குறைந்ததால் நேற்று ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இவ்வாறு கூறினார்.
The post வலுவான புயலாக மாற வாய்ப்பு இல்லை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலைக்குள் தற்காலிக புயலாக மாறும்: பாலச்சந்திரன் பேட்டி!! appeared first on Dinakaran.