×
Saravana Stores

உவமைக் கவிஞர் சுரதாவின் 104-வது பிறந்தநாள்: அசோக் நகரிலுள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் நாளை மரியாதை

சென்னை: உவமைக் கவிஞர் சுரதாவின் 104-வது பிறந்தநாளையொட்டி அசோக் நகரிலுள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் நாளை மரியாதை செலுத்த உள்ளனர். உவமைக் கவிஞர் சுரதாவின் 104-வது பிறந்த நாளான 23.11.2024 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, அசோக் பில்லர் மாநகராட்சி பூங்கா அருகில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள். உவமைக் கவிஞர் சுரதா , தஞ்சாவூர் மாவட்டத்தில் பழையனூர் எனும் சிற்றூரில் 1921 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாள் பிறந்தார். கவிஞர் சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன். இவர், பள்ளிப் படிப்பினைச் சிறப்பான முறையில் முடித்தபின், சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார்.

பாவேந்தர் பாரதிதாசனிடம் கொண்ட தீவிரப் பற்றின் காரணமாக. பாரதிதாசனின் இயற்பெயராகிய “சுப்புரத்தினம்” என்பதுடன் “தாசன்” சேர்த்து “சுப்புரத்தினதாசன்” எனத் தம்மை அழைத்துக் கொண்டார். அதையே “சுரதா” என்றும் குறிப்பிடத் தொடங்கினார். அதன் பின்னர், அவர் இயற்பெயரே மறைந்து சுரதா என்னும் புகழ்ப் பெயரே நிலைத்துவிட்டது. “சுரதா” என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகளைப் படைத்தார். செய்யுள் மரபு மாறாமல் எழுதி வந்த இவர், உவமைகள் அமைத்து எழுதுவதில் தனிப்புகழையும் பெற்றார். இதன்பொருட்டே இவர், “உவமைக் கவிஞர்” என்று அனைவராலும் பெருமிதத்தோடு அழைக்கப்பட்டார்.

1941ஆம் ஆண்டில் பாவேந்தர் பாரதிதாசனை முதன்முறையாகச் சந்தித்து அவர்பால் ஏற்பட்ட மிகுந்த அன்பின் காரணமாக, அவரது கவிதைப் பணிக்குப் பேருதவியாகவும் விளங்கினார். பாவேந்தரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு, அவருடைய அறிவுரைப்படி, அவரின் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளை உடனிருந்து மேற்கொள்ளல் ஆகியவற்றுடன் அவருடைய நூல்கள் பலவற்றின் வெளியீட்டிற்கும் துணைபுரிந்தார். சுயமரியாதை இயக்கத்தின் கருத்துகளைப் பரப்பும் வகையில்,நாடகக்குழு ஒன்றினை அமைத்து தந்தை பெரியார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ‘புரட்சிக்கவி’ நாடகத்தில் நடித்தார்.

அந்நாடகம் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள், உரையாடல்கள் எழுதியுள்ளார். “அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு” “ஆடி அடங்கும்
வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா” முதலிய இவர் எழுதிய பாடல்கள் என்றும் மங்காத புகழ் பெற்றவையாகும். இவரது முதல் நூல் ‘சாவின் முத்தம்’ ஆகும். 1954 முதல் கலைஞரின் ‘முரசொலி’ இதழில் தொடர்ந்து இவர் எழுதிய எழுச்சியூட்டும் கவிதைகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது.

1955-இல், உலகிலேயே முதன்முறையாகக் கவிதை நடையிலேயே ‘காவியம்’ என்கிற வார இதழைத் தொடங்கிய பெருமை இவரையே சேரும். தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனப் பல இலக்கிய ஏடுகளையும், இதழ்களையும் தொடங்கிக் கவிதை வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தார். 1969-இல் “தேன்மழை” என்கிற இவரது கவிதை நூலுக்குத் தமிழக அரசு பரிசு வழங்கிப் பாராட்டியது. கலைஞர் முதலமைச்சராக வீற்றிருந்தபோது 1972-இல் தமிழக அரசின் கலைமாமணி விருதும், 1990 ஆம் ஆண்டில் கலைத்துறை வித்தகருக்கான ‘பாரதிதாசன் விருதும்’ வழங்கப்பட்டு. இவர் சிறப்பிக்கப்பட்டார்.

2007ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் கவிஞர் சுரதா எழுதிய நூல்கள் அனைத்தையும் அரசுடைமையாக்கி, அவரது மரபுரிமையருக்கு ரூபாய் 10 லட்சம் பதிவுத் தொகை வழங்கினார். மேலும் கவிஞர் சுரதா புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், சென்னை அசாக் நகரில் அவரது திருவுருவச் சிலையை, 29.9.2008 அன்று கலைஞர் திறந்து வைத்தார்கள். அப்போது அவர் ஆற்றிய உரையில், “சுரதா வெறும் புலவர் மாத்திரமல்ல. கவிஞர் மாத்திரமல்ல, தந்தை பெரியார் அவர்களால் தயாரிக்கப்பட்ட சுயமரியாதைப் போர்வாளாகத் திகழ்ந்தார்” என்று கூறிப் பாராட்டினார். தமிழ் இலக்கியத்திற்கும், இலக்கணத்திற்கும் தனிப்பெருந் தொண்டாற்றிய சிறப்புமிக்க உவமைக் கவிஞர் சுரதாவை போற்றும் வகையில், அன்னாரின் பிறந்த நாளான நவம்பர் 23-ஆம் நாள் அரசு விழாவாக ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் கவிஞர் சுரதா பிறந்த நாளில், தமிழ்நாடுஅரசின் சார்பில் அமைச்சர் பெருமக்கள், அவரது திருவுருவச்சிலைக்கு மாலையணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.இந்நிகழ்ச்சியில், மேயர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள்
மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிப்பார்கள்.

 

The post உவமைக் கவிஞர் சுரதாவின் 104-வது பிறந்தநாள்: அசோக் நகரிலுள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் நாளை மரியாதை appeared first on Dinakaran.

Tags : Surada ,Day ,Ashok ,Chennai ,Ashok Pillar ,Municipality ,
× RELATED எமக்குத் தொழில் ரொமான்ஸ் விமர்சனம்…