×
Saravana Stores

சிவசேனா சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்வு; மும்பையில் சுற்றித் திரிய வேண்டாம்: புதிய எம்எல்ஏக்களுக்கு ஏக்நாத் அட்வைஸ்

மும்பை: சிவசேனா சட்டமன்ற கட்சித் தலைவராக ஏக்நாத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், புதிய எம்எல்ஏக்கள் மும்பையில் மட்டும் சுற்றித் திரிய வேண்டாம் என்று அட்வைஸ் கூறினார். மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவை தேர்தலில் மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. கூட்டணி கட்சிக்குள் முதல்வர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையில், மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏக்களின் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில், சிவசேனா எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டேவை சட்டமன்றக் கட்சியின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தனர்.

மேலும் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் வெற்றிக்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு பாராட்டு தெரிவித்தல், சட்டமன்றக் கட்சித் தலைவராக ஏக்நாத் ஷிண்டேவைத் தேர்ந்தெடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், ‘இந்த தேர்தல் வெற்றியானது எதிர்பாராதது. எங்களது வலிமை அதிகரித்துள்ளது. எங்களது பணி தொடரும். அதேநேரம் மகாயுதி கூட்டணிக்கு தீங்கு விளைவிக்கும் எந்த அறிக்கையையும் நிர்வாகிகள் யாரும் வெளியிடக் கூடாது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் முதல் நாளிலிருந்தே தொகுதி மற்றும் வாக்காளர்களிடம் நேர்மையாக இருக்க வேண்டும்.

உங்களது பணியை சிறப்பாக செய்யுங்கள். மும்பையில் மட்டும் சுற்றித் திரிய வேண்டாம்’ என்றார். அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிவசேனா எம்எல்ஏக்கள் மாநிலத்தில் அடுத்த அரசை அமைப்பதற்காக ஆளும் மகாயுதி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு முழு அதிகாரம் அளித்துள்ளனர். சிவசேனா தலைவர் தீபக் கேஸ்கர் கூறுகையில், ‘முதல்வர் பதவி குறித்து எந்த சர்ச்சையும் இல்லை; பதவியேற்பு விழா மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும். அஜித் பவார் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் அந்தந்த கட்சிகளின் தேசியத் தலைவர்களாக உள்ளனர். முதல்வர் யார்? என்பது டெல்லியில் தீர்மானிக்கப்படும். இதில் எவ்வித முரண்பாடும் இல்லை’ என்றார்.

பட்னாவிஸ் தான் அடுத்த முதல்வர்
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மகாயுதி கூட்டணியின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் நடிகையும், பாஜக மூத்த தலைவருமான நவ்னீத் ராணா கூறுகையில், ‘கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைந்து தேர்தல் வெற்றியில் முக்கிய பங்காற்றியது தேவேந்திர பட்னாவிஸ் தான்; அதனால் அவர் தான் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக வர வேண்டும். மக்களவைத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் ெபாய்யான பிரசாரத்தில் ஈடுபட்டன. ஆனால் இந்த முறை பாஜக வெற்றி பெற்றுள்ளது’ என்றார்.

The post சிவசேனா சட்டமன்ற கட்சித் தலைவர் தேர்வு; மும்பையில் சுற்றித் திரிய வேண்டாம்: புதிய எம்எல்ஏக்களுக்கு ஏக்நாத் அட்வைஸ் appeared first on Dinakaran.

Tags : Sivasena Assembly Party ,Mumbai ,Eknath ,Advice ,Mahayuti ,Maharashtra State Legislative Assembly elections ,
× RELATED மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1073 புள்ளிகள் உயர்வு!!