×
Saravana Stores

கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் கிடையாது அதானி குழுமத்துடன் தமிழக அரசுக்கு எந்தவித நேரடி தொடர்பும் இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

கரூர்: கடந்த 3 ஆண்டுகளில் அதானி குழுமத்திற்கும், தமிழக அரசுக்கும் எந்தவித ஒப்பந்தங்களும் செய்யப்படவில்லை என கரூரில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதிபடத் தெரிவித்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காமராஜ் தினசரி காய்கறி மார்க்கெட்டில் ரூ.6 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் 160 கடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்திற்கான மின்சார தேவைக்காக ஒன்றிய அரசின் (சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) நிறுவனத்திடம் இருந்து 1500 மெகாவாட் மின்சாரம் ரூ.2.61 கட்டணத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த கால அதிமுக ஆட்சியில் இதே சோலார் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கு ரூ.7.1 கட்டணம் கொடுத்து கொள்முதல் செய்யப்பட்டது.
சோலார் மின்சாரம் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் தொடர்பு கொண்டு அதன் வாயிலாகவே கொள்முதல் செய்யப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் மினி டைடல் பார்க் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணி இன்னும் 1 வாரம் முதல் 10 நாட்களுக்குள் முடிவடையும். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, அதானி நிறுவனம் ஒப்பந்தம் பெற லஞ்சம் பெற்றுள்ளதாக அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் தமிழ்நாட்டிலும் மின்வாரிய ஒப்பந்தங்கள் செய்து உள்ளதாக கூறப்படுகிறதே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி கூறுகையில், ‘அதானி குழுமத்திற்கும், தமிழக அரசுக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் எந்தவிதமான ஒப்பந்தங்களும் செய்யப்படவில்லை. மின்வாரியம் தொடர்பாக எந்தவித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. சமூக ஊடகங்கள் மற்றும் சில செய்தி நிறுவனங்கள் இது தொடர்பாக தவறான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பான எந்தவிதமான கருத்துக்களையும் என்னிடம் நேரடியாகவோ அல்லது மின்சாரத்துறை அதிகாரிகளிடமோ கேட்டு பதிவிட வேண்டும்’ என்றார்.

 

The post கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் கிடையாது அதானி குழுமத்துடன் தமிழக அரசுக்கு எந்தவித நேரடி தொடர்பும் இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Adani group ,Minister ,Senthil Balaji ,Karur ,Kamaraj ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED அதானி குழுமத்திற்கும், தமிழ்நாடு...