வேளச்சேரி: அடையாறு மாநகர பேருந்து பணிமனையில் இருந்து இன்று அதிகாலை வேகமாக வந்த பேருந்து, எதிர்திசையில் நடைபாதை மீது ஏறி, காவல்நிலைய மதில்சுவரில் மோதி நின்றது. இவ்விபத்தில், காவல்நிலையத்தில் நிறுத்தியிருந்த பறிமுதல் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. இப்புகாரின்பேரில் மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய மெக்கானிக்கிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட மெக்கானிக்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை அடையாறு மாநகர போக்குவரத்து பணிமனையில் குணசேகரன் (50) என்பவர் மெக்கானிக்காக வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு ஒழுங்கீனம் காரணமாக, கடந்த 10 நாட்களுக்கு மேலாக எவ்வித பணியும் தரப்படவில்லை. இந்நிலையில், இன்று அதிகாலை அடையாறு மாநகர போக்குவரத்து பணிமனைக்கு மதுபோதையில் குணசேகரன் வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு, அனைவரிடமும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் நேராக பணிமனைக்குள் சென்று, அங்கு நின்றிருந்த மாநகர பேருந்தில் குணசேகன் ஏறியுள்ளார்.
பின்னர் பணிமனையில் இருந்து அப்பேருந்தை வேகமாக வெளியே அதிவேகமாக ஓட்டிவந்துள்ளார். ஏற்கெனவே அவர் மதுபோதையில் இருந்ததால், மாநகர பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் இருந்த நடைபாதையில் ஏறி, அங்கிருந்த அடையாறு காவல்நிலைய மதில்சுவரில் மோதி நின்றது. மாநகர பேருந்தின் வேகத்தை அங்கிருந்த மரம் தடுத்ததால், காவல் நிலைய பணியில் இருந்த போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதைத் தொடர்ந்து, மதுபோதையில் மாநகர பேருந்தை ஓட்டிவந்த மெக்கானிக் குணசேகரனை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர் அதிகளவு மதுபோதையில் இருப்பதும் சோதனையில் தெரியவந்தது. இதுகுறத்து அடையாறு மாநகர போக்குவரத்து பணிமனை இளநிலை பொறியாளர் கிளமென்ட் அளித்த புகாரின்பேரில், அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, மதுபோதையில் மாநகர பேருந்தை ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய மெக்கானிக் குணசேகரனை கைது செய்து விசாரிக்கின்றனர். இதில் 5 பைக், 2 காவல் துறை வாகனங்கள் சேதமாகின.
மேலும், அத்துமீறி மாநகர போக்குவரத்து பணிமனைக்குள் நுழைந்து, சட்டவிரோதமாக மாநகர பேருந்தை அதிவேகமாக ஓட்டிவந்து விபத்தை ஏற்படுத்திய மெக்கானிக் குணசேகரன்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து பணிமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post போலீஸ் ஸ்டேஷன் சுவரில் பஸ்சை மோதிய மெக்கானிக்: அடையாறில் இன்று போதையில் ரகளை appeared first on Dinakaran.