ஜி20ன் கோடீஸ்வரர்களுக்கு வரி விதிப்பு முன்மொழிவு; ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பிரதிபலிக்குமா? காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி; பாஜ தலைமையிலான ஒன்றிய அரசு கோடீஸ்வர முதலாளிகளுக்காக செயல்படுவதாகவும், அதன் ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகி வருவதாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றது. எனினும் பாஜ இந்த குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதோடு ஏழைகளை மேம்படுத்துவதற்கு பாடுபட்டு வருவதாக கூறி வருகின்றது. இந்நிலையில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஜி20 மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவு பிரகடனத்தில், அதிக சொத்து மதிப்புள்ள தனிநபர்களுக்கு வரிவிதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘செவ்வாயன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜி20 தலைவர்களின் முன்மொழிவில், அதிக மதிப்புடைய சொத்துக்களை கொண்ட தனிநபர்களுக்கு வரி விதிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு ஒத்துழைப்புடன் ஈடுபட முயற்சிப்போம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்னும் 75நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். ஜி20யில் எட்டப்பட்ட வரி விதிப்பு குறித்த இந்த ஒருமித்த கருத்து ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பிரதிபலிக்குமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

The post ஜி20ன் கோடீஸ்வரர்களுக்கு வரி விதிப்பு முன்மொழிவு; ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் பிரதிபலிக்குமா? காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: