பழநி: வருடாந்திர பராமரிப்புப் பணி முடிந்ததையடுத்து பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இன்று காலை முதல் ரோப் சேவை தொடங்கியது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயில் உள்ளது.
அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் கோயிலுக்கு செல்வதற்கு தெற்கு கிரி வீதியில் இருந்து ரோப் கார், மேற்கு கிரி வீதியில் இருந்து வின்ச் ஆகியவை இயக்கப்படுகின்றன. ரோப் காரில் 3 நிமிடத்தில் கோயிலுக்குச் செல்லலாம். இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 450 பேர் பயணிக்கலாம். இந்த நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக, கடந்த அக்.7 முதல் ேராப் கார் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரோப் காரில் ரூ.7 லட்சம் மதிப்பிலான புதிதாக இரும்புக்கயிறும், ரூ.2 லட்சம் மதிப்புள்ள புதிய ஷாப்ட் இயந்திரமும் பொருத்தப்பட்டன.
பின்னர் ரோப் காரில் பெட்டிகளை பொருத்தி, அதில் பஞ்சாமிர்த பெட்டிகள் மற்றும் கற்களை ஏற்றி கடந்த 16ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதனை ஆய்வு செய்த வல்லுநர் குழுவினர் ரோப் காரை இயக்க ஒப்புதல் அளித்தனர்.
இதையடுத்து இன்று காலை முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப் கார் சேவை தொடங்கியது. முன்னதாக காலை 9 மணியளவில் ரோப் காருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில், பழநி ேகாயில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நீண்ட நாட்களுக்கு பின் ரோப் கார் இயக்கப்படுவதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post பராமரிப்பு பணி நிறைவடைந்ததால் பழநியில் ரோப் கார் சேவை தொடக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.