கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரைபகுதியையொட்டிய 42 மீனவ கிராமங்களையொட்டி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பாதுகாப்பு ஒத்திகையை தொடங்கி உள்ளனர். இன்றும், நாளையும் அதிநவீன படகுகளில் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடலோர பகுதிகளில் தீவிரவாதிகள் நுழைவதை தடுக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஆண்டுதோறும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான 42 மீனவ கிராமங்களை ஒட்டிய கடற்பகுதியில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகையை இன்று காலை தொடங்கி உள்ளனர்.
கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் இந்திய கப்பல் படை, கடலோர காவல் படை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும போலீசார், தமிழ்நாடு காவல்துறை, சுங்கத்துறை போலீசார் ஆகியோர் இணைந்து இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலோர காவல் படையினரில் சிலர் தீவிரவாதிகள் போல் வேடமணிந்து கடல் பகுதியில் அத்துமீறி நுழைவது போலவும், அவர்களை சக போலீசார் கண்டுபிடித்து முறியடிப்பது போன்றும் பாதுகாப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேபோல் அதிநவீன படகுகள் மூலம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும் மீனவர்களிடம் அடையாளம் தெரியாத படகில் யாராவது வந்தால் உடனடியாக தகவல் தரவேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடைபெற இருந்தால் முன் கூட்டியே எச்சரிக்கையாக எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்தும் எடுத்து கூறினர். இந்த ஒத்திகை நாளை நிறைவடைகிறது.
The post குமரியில் 2 நாட்களுக்கு பாதுகாப்பு ஒத்திகை; 42 மீனவ கிராமங்கள் கண்காணிப்பு: அதிநவீன படகுகளில் போலீசார் ரோந்து appeared first on Dinakaran.