குன்னூர், நவ.20: குன்னூரில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் குன்னூர் அருகே நான்சச், கொலக்கொம்பை, ஆடர்லி போன்ற பகுதிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்று ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக நான்சச் பகுதியில் செயல்படும் உயர்நிலைப்பள்ளியில் 70 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். மேலும் 8 ஆசிரியர்கள் அங்கு பணிபுரிந்து வருகின்றனர். சம்பளம் வழங்கும் அதிகாரி ஒருவர் கையொப்பமிடுவதற்கு தயக்கம் காட்டி வருவதாகவும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சுதாகரன் கூறுகையில்,
‘‘அதிகாரிக்கு இருக்கும் தனிப்பட்ட பிரச்னை காரணமாக பள்ளியில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதேபோல் குன்னூர் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் இதேநிலை நீடித்து வருகிறது. இதனால் மாணவர்களின் படிப்பு கேள்விக்குறியாகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் நலனை பாதுகாக்க இனிவரும் காலங்களில் அரசு நேரடியாக ஆசியர்களின் வங்கிக்கணக்கில் அவர்கள் பணியாற்றியதற்கான சம்பள தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்தார்.
The post அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மாத சம்பளம் நிலுவை appeared first on Dinakaran.