அண்ணாநகர்: முகப்பேர் பகுதியை சேர்ந்த மகேஸ்வரன் (41) என்பவர், தனது மகளின் பள்ளி கட்டணம் கட்டுவதற்கு பணம் இல்லாததால், மனைவியின் ஒரு சவரன் செயினை அடகு வைத்து பணம் பெறுவதற்கு சென்றுள்ளார். அடகு கடைக்கு சென்ற மகேஸ்வரன், பாக்கெட்டை சோதனை செய்தபோது தங்க சையின் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் வந்த வழியில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து வீடு திரும்பிய மகேஷ்வரன், செயின் தொலைந்தது குறித்து தனது மனைவியிடம் தெரிவித்தார். இதனால், குடும்பத்தினர் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். அப்போது, மகேஷ்வரன் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், பேசியவர், ‘‘நான் நொளம்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் பேசுகிறேன். உங்களது செயின் ஏதும் தொலைந்து விட்டதா,’’ என கேட்டுள்ளார்.
அதற்கு இவர் ஆமாம், என தெரிவித்துள்ளார். உடனே, ‘‘தொலைந்து போன செயின் கிடைத்து விட்டது. காவல் நிலையம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்,’’ என இன்ஸ்பெக்டர் கூறியுள்ளார். உடனே குடும்பத்துடன் நொளம்பூர் காவல் நிலையம் சென்று, இன்ஸ்பெக்டரை சந்தித்து, ‘‘தொலைந்து போன சையின் எப்படி கிடைத்தது,’’ என்று கேட்டனர். அப்போது, முகப்பேர் பகுதியை சேர்ந்த பாஸ்கர் (42), பைக்கில் சென்றபோது கீழே தங்க செயின் கிடைத்துள்ளது. அதை எங்களிடம் ஒப்படைத்தார். அதன் பின்னர், சையினை தொலைத்தவர் யார் என்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, பைக்கின் எண்ணை வைத்து உங்களது செல்போன் எண்ணை கண்டுபிடித்தோம், என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். பின்னர், அண்ணாநகர் துணை ஆணையர் சினேகா பிரியா முன்னிலையில், மகேஸ்வரனிடம் அந்த செயின் ஒப்படைக்கப்பட்டது. மகேஸ்வரனின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
The post கல்வி கட்டணம் செலுத்த அடகு வைக்க சென்றபோது பள்ளி மாணவியின் தந்தை தொலைத்த நகையை மீட்டு ஒப்படைத்த போலீசார்: பாதிக்கப்பட்ட நபர் புகார் தருவதற்கு முன்பே சிசிடிவி கேமரா மூலம் கண்டறிந்து நடவடிக்கை appeared first on Dinakaran.