சென்னை: மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்து 10 மடங்கு விலை வைத்து விற்பனை செய்த 6 பேர் கும்பலை பெரம்பூர் ரயில் நிலையத்தில் போலீசார் சுற்றி வளைத்தனர். வடசென்னையில் இளைஞர்கள் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தி அதனால் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து தொடர்ந்து போலீசார் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்தும் நபர்களை கைது செய்து வருகின்றனர். மேலும் குறிப்பிட்ட மாத்திரைகளை மருத்துவர் ஒப்புதல் சீட்டு இல்லாமல் தரக்கூடாது என மருந்தகங்களிலும் போலீசார் அறிவுறுத்தி வந்தனர். இதனால் சென்னையில் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனவே, அதனை வாங்கி விற்பனை செய்பவர்கள் ஆன்லைன் மூலமாகவும் மேலும் வடமாநிலங்களுக்கு ரயில் மூலமாக சென்று அங்கு மாத்திரைகளை வாங்கி வந்து விற்பனை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. அந்த வகையில், சென்னையை சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் மும்பைக்குச் சென்று வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி வரும்போது காவல்துறையிடம் வசமாக பிடிப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் இருந்து பெரம்பூர் நோக்கி வரும் ரயிலில் சிலர் வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக எடுத்து வருவதாக கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ரகுபதிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தலைமைச் செயலக காலனி இன்ஸ்பெக்டர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலை 7 மணி அளவில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் தயாராக நின்று கொண்டிருந்தனர். அப்போது மும்பையில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த ரயிலில் இருந்து இறங்கிய நபர்களை தொடர்ந்து கண்காணித்து அதில் 6 பேரை தனியாக அழைத்து அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அதில் சுமார் 1080 வலி நிவாரண மாத்திரைகள், இரண்டு பாக்கெட் கஞ்சா மற்றும் ஐந்து பாக்கெட் சிரஞ்சி உள்ளிட்டவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 6 பேரையும் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திவாகர் (26), வியாசர்பாடி பகுதியை சேர்ந்த இளம்பருதி என்கின்ற ரியோ (28), சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (20), சுப்பிரமணி (21), ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த அன்னாள் என்கின்ற ரோஸ்லின் (24), வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ரம்யா என்கின்ற திரிஷா (25) என்பது தெரிய வந்தது. இவர்கள் கடந்த 16ம் தேதி சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மும்பைக்குச் சென்று சத்திரபதி சிவாஜி ரயில் நிலையம் எதிரே உள்ள கேகேஆர் மெடிக்கல்ஸ் என்ற மருந்தகத்தில் 38 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து 1080 வலி நிவாரண மாத்திரைகளை வாங்கியுள்ளனர். அதனை திருப்பிக் கொண்டு வரும்போது போலீசாரிடம் சிக்கியது தெரிய வந்தது. அங்கு ஒரு மாத்திரையை 30 ரூபாய்க்கு வாங்கி அதனை சென்னையில் 200 ரூபாய் வரை வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் சிறையில் அடைத்தனர்.
The post மும்பையிலிருந்து வாங்கி வந்து 10 மடங்கு கூடுதல் விலைக்கு போதை மாத்திரை விற்பனை: ரயில் நிலையத்தில் 6 பேர் கைது appeared first on Dinakaran.