×
Saravana Stores

சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்படுமா?.. தொடர் விபத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்

திங்கள்சந்தை: நெருக்கடி நிறைந்த சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலை ஓரம் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும். மீறுவோர் மீது அபராதம் உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஓட்டுனர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள பிரதான தேசிய நெடுஞ்சாலையில் சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையும் ஒன்று. இந்த வழியாக தினம் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நெருக்கடி மிகுந்த இந்த சாலையில் விபத்துகளும் குறைந்த பாடில்லை. குறிப்பாக சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலை ஐயப்பா கல்லூரி ஜங்ஷனில் இருந்து களியங்காடு சிவன் கோயில் செல்லும் ஜங்ஷன் வரை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. இதற்கு காரணம் சில தனியார் நிறுவனங்கள் நெடுஞ்சாலை ஓரத்தை பார்க்கிங் பகுதியாக பயன்படுத்தி வருவதே ஆகும்.

சுங்கான்கடையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வரும் ஆம்னி பஸ், டூரிஸ்ட் வேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்படுவது வாடிக்கையாக்கிவிட்டது. அதேபோல தனியார் மருத்துவமனைக்கு வரும் கார், பைக் உள்ளிட்ட வாகனங்களையும் தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். 2 வாகனங்கள் எதிரெதிரே செல்ல மட்டுமே இடம் உள்ள இந்த சாலையில் பைக் மற்றும் பாதசாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்பட்டு காயம், உயிர் பலி ஏற்படும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது. இதற்கு காரணம் இந்த பகுதியில் உள்ள நிறுவனங்களுக்கு வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி இல்லாததுதான் என்கின்றனர் வாகன ஓட்டுநர்கள். இந்த மருத்துவமனை, ஓட்டல் முன்பு என இப்பகுதியில் வாகனங்கள் நிறுத்த கூடாது என்பதை குறிக்கும் வகையில் \\”நோ பார்க்கிங்\\” எச்சரிக்கை பலகை குளச்சல் போக்குவரத்து காவல்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்தது.

தற்போது இந்த போர்ட்கள் அகற்றப்பட்டிருப்பது அதிர்ச்சியாக உள்ளது. இந்த எச்சரிக்கை பலகைகளை காவல்துறை அகற்றியதா? அல்லது சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் அகற்றியதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். எச்சரிக்கை பலகை இருந்தும் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வந்த நிலையில், எச்சரிக்கை பலகை இல்லை எனில் இந்த நெடுஞ்சாலையில் விபத்து அன்றாட நிகழ்வாகிவிடும். மேலும் தனியார் நிறுவனங்களின் பார்க்கிங் பகுதியாகவே நெடுஞ்சாலை மாறிவிடும். தற்போது சபரிமலை சீசன் தொடங்கிவிட்டதால் இந்த சாலையில் வழக்கத்தை விட பல மடங்கு வாகனங்கள் வரத்து அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நெடுஞ்சாலை ஓரம் நடப்பட்டிருந்த நோ பார்க்கிங் எச்சரிக்கை பலகைகளை அகற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இந்தப் பகுதிகளில் இருபுறமும் நோ பார்க்கிங் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும். இந்த பகுதியில் சாலை ஓரம் வாகனங்களை நிறுத்தாத வகையில் குளச்சல் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கண்காணிக்க வேண்டும். மீறுவோர் மீது அபராதம் விதிப்பது உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள். நெடுஞ்சாலை ஓரம் நடப்பட்டிருந்த நோ பார்க்கிங் எச்சரிக்கை பலகைகளை அகற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இந்தப் பகுதிகளில் இருபுறமும் நோ பார்க்கிங் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்.

The post சுங்கான்கடை தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்படுமா?.. தொடர் விபத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Customs National Highway ,National Highway ,Dinakaran ,
× RELATED மரபு மாறா மெஸ்!