- திருச்செந்தூர்
- சுப்பிரமணிய சுவாமி கோயில்
- தேவனா
- ராதாகிருஷ்ணன்
- செந்தில்குமார்
- உதயகுமார்
- திருச்செந்தூர் வௌசி தெரு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு முதல் தெய்வானை என்ற பெண் யானை உள்ளது. இதனை பராமரிக்கும் பாகன்களாக ராதாகிருஷ்ணன் (57) மற்றும் அவரது உறவினர்களான திருச்செந்தூர் வஉசி தெருவை சேர்ந்த செந்தில்குமார் (47), உதயகுமார் (46) ஆகியோர் பணிபுரிந்தனர். இந்நிலையில் நேற்று காலை பணியில் இருந்த ராதாகிருஷ்ணன் தெய்வானை யானைக்கு உணவு வழங்கிவிட்டு மதிய உணவுக்காக வீட்டிற்கு சென்றார். மதியம் சுமார் 3 மணி அளவில் பாகனான உதயகுமாரும் அவரது உறவினரான கன்னியாகுமரி மாவட்டம் பளுகலைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் சிசுபாலன் என்பவரும் யானை குடிலுக்கு வந்தனர். அப்போது யானை தாக்கியதில் சிசுபாலன் மற்றும் உதயகுமார் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து கோயில் பணியாளர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கோயில் கண்காணிப்பாளர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோயில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். உதயகுமார், சிசுபாலன் ஆகியோரது உடல்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில் தெய்வானை யானை பாகன் உதயகுமாருடன் நெருங்கி பழகிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது உதயகுமார் தனது தந்தை சதாசிவ நாயர் யானைப்பாகனாக இருந்த போதிலிருந்தே யானையை அதிகமாக நேசித்து வந்தார். இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலுக்கு கடந்த 2006ம் ஆண்டில் 8 வயதில் தெய்வானை யானை குழந்தையாக வந்தது.
அப்போது உதயகுமார் தனது 28 வயதில் இருந்தே தந்தைக்கு உதவியாக இருந்து தெய்வானை யானையுடன் பழக ஆரம்பித்தார். அவரது தந்தை மறைவுக்குப் பிறகு உதயகுமார் கடந்த 2018 – 2019ம் ஆண்டு முதல் கோயிலில் பாகனாக பணிபுரிந்து வந்தார். இதனால் 18 வருட காலம் தெய்வானை யானையுடன் நெருங்கி பழகி உள்ளார். இதேபோல இதற்கு முன்பு கோயிலில் இருந்த ஆண் யானை குமரனுடனும் உதயகுமார் நெருங்கி பழகி வந்ததால், முதுமலை காட்டில் நடந்த முகாமிற்கு சென்றபோது கூட உதயகுமாரிடம் யானை கொஞ்சி விளையாடியது. அந்த படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. தற்போதுள்ள தெய்வானை யானையும் கோயில் சரவண பொய்கையில் உள்ள நீச்சல் தொட்டியில் குளிக்கும்போது உரிமையுடன் ஓடி ஆடி விளையாடி வந்தது.
இதனால் யானைகளுடன் நெருங்கி பழகி வந்த பாகனையே யானை தாக்கி உயிரிழந்த சம்பவமும், உதயகுமாரின் பெரியப்பாவான முன்னாள் கோயில் யானைப்பாகன் கிருஷ்ணன் நாயரின் மகன் சிசுபாலனும் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் திருச்செந்தூர் மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இயல்பு நிலையில் தெய்வானை யானை
தெய்வானை யானையை பரிசோதித்த வனத்துறை மாவட்ட மருத்துவ அலுவலர் மனோகரன் இயல்பு நிலையில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் பழங்கள் சாப்பிடுவதாகவும், அடுத்த இரண்டு நாட்களுக்கு யானை முழு கண்காணிப்பில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருச்செந்தூரில் யானை தாக்கி இறந்த இருவர் உடல் ஒப்படைப்பு; பாகனிடம் பாசமழை பொழிந்த தெய்வானை யானை: உருக்கமான தகவல்கள் appeared first on Dinakaran.