தேனி, நவ. 19: மானிய உதவியுடன் சுயதொழில் செய்ய விரும்பும் பெண்கள் வருகிற டிசம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசின் சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் சமுதாயத்தில் வாழ கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
இதன்மூலம் நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறி வியாபாரம், நடமாடும் சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைக்கடைகள் போன்ற சுயதொழில்கள் மூலமாக பெண்கள் நிலையான வருமானம் பெற இயலும். எனவே, இம்மானியத்தினை பெற தகுதியான பெண்கள் http://theni.nic.in என்ற இணையதளம் மூலம் வருகிற டிசம்பர் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரூ.50 ஆயிரம் மானியத்தில் பெண்கள் சுயதொழில் துவங்க டிச.7க்குள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.