மதுரை, நவ. 19: மதுரை மாநகராட்சி பள்ளியின் மாடியிலிருந்து தவறி விழுந்து காயமடைந்த மாணவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நேற்று நேரில் சந்தித்து கலெக்டர் சங்கீதா சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். மதுரை, முத்துப்பட்டியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கணேசன். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களது மகன் அகிலன்(10), பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.
கடந்த 14ம் தேதி குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டபோது, பள்ளி கட்டிடத்தின் மேலே உள்ள மொட்டை மாடி பகுதியில் இருந்து கபிலன் திடீரென தவறி கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், சிறுவனின் உறவினர்கள், மதுரை கலெக்டரை சந்தித்து இப்பிரச்னையில் தவறு செய்தோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மாணவர் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி மனு அளித்தனர்.
அதனை பெற்றுக் கொண்ட கலெக்டர் சங்கீதா, உடனடியாக சிறுவனின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, சிறுவனை நேரில் பார்த்து நலம் விசாரித்த அவர், பின்னர் சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டீன் அருள் சுந்தரேஷ்குமாரிடம் கேட்டறிந்தார். மேலும் சிறுவனுக்கு அதிநவீன மருத்துவ சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘‘சிறுவனுக்கு அதிநவீன சிகிச்சைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல முறையில் குணமாகி விடுவார்’’ என்றனர்.
The post பள்ளியில் தவறி விழுந்து காயமடைந்த மாணவரை சந்தித்த கலெக்டர்: நவீன சிகிச்சை அளிக்க பரிந்துரை appeared first on Dinakaran.