பள்ளிக்கரணை சதுப்புநில ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு எடுத்த துரித நடவடிக்கை செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

துரைப்பாக்கம்: சென்னை சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்தது செல்லும், அதை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கரணை மகாலட்சுமி நகரில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி, தமிழக அரசின் வனத்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதை ரத்து செய்யக்கோரி லட்சுமி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, வனத்துறை சார்பாக சிறப்பு அரசு வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி, வனத்துறையின் அறிக்கையை தாக்கல் செய்தார்.  அதில், பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் 74 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மாற்று இடம் தொடர்பான விண்ணப்பம் கோரப்பட்டது. அதில், 47 ஆக்கிரமிப்பாளர்கள் சமர்பித்த விண்ணப்பங்கள் தகுதியானதாகவும், 27 விண்ணப்பங்கள் தகுதி இல்லாததாகவும் இருந்தது. இதையடுத்து, 47 பேருக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மகாலட்சுமி நகர் குடியிருப்பு ஆக்கிரமிப்பாளர்களை மறு குடியமர்த்த முடிவு ெசய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது உடமைகளை எடுக்க 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. தொடர்ந்து வனத்துறை தரப்பு வழக்கறிஞர், மக்கள் மழை காலத்தில் சிரமப்படக்கூடாது என்று கருதி தான் உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

அதன்படி, ஏற்கனவே உள்ள ஆக்கிரமிப்பாளர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் புதிய கட்டிடம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு அவர்கள் போகாமல் இங்கு வந்து வழக்கு தொடர்ந்துள்ளனர். மழை காலத்தில் தமிழக அரசு விரைந்து செயல்படுகிறது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதை கேட்ட நீதிபதி, ஆக்கிரமிப்புகளினால் மழைநீர் செல்வது தடைபடுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு வனத்துறை எடுத்த நடவடிக்கை செல்லும் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post பள்ளிக்கரணை சதுப்புநில ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு எடுத்த துரித நடவடிக்கை செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: