- தமிழ்
- ஐரோப்பிய ஒன்றிய
- கேரள ஊராட்சி
- இந்தியா
- அனவச்சல் கார்பார்க்
- பெரியாரு நீர் நீர்த்தேக்கம்
- தமிழ்நாடு
- அனவாச்சல்
- இன் கணக்கெடுப்பு
கூடலூர்: ஆனவச்சால் கார்பார்க்கிங் விவகாரத்தில் சர்வே ஆப் இந்தியா ஒரு தலைபட்ச முடிவால், பெரியாறு நீர் தேக்கப்பகுதி அபகரிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய, கேரள அரசைக் கண்டித்து தமிழக அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ளன.
ஆனவச்சால் கார் பார்க்கிங்
முல்லைப்பெரியாறு அணை தென்தமிழக மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத்திற்கு முக்கிய நீராதாரமாக உள்ளது. இதன் நீர்த்தேக்க பகுதியான தேக்கடி படகுத்துறையில் இருந்து 4 கி.மீ தொலைவில் இருக்கும் 2.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஆனவச்சால் பகுதி பெரியாறு அணையின் நீர்த் தேக்க பகுதியாக உள்ளது. இந்த பகுதி தமிழகத்தின் 999 ஆண்டு கால குத்தகை உரிமையில் உள்ள 8,000 ஏக்கரின் கீழ் வருகிறது. இந்த நிலத்தை கேரள அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில், தேக்கடிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை நிறுத்த 2013ல் இந்த நிலத்தை அம்மாநில வனத்துறை தேர்வு செய்தனர். ஆனால், இந்த இடம் பெரியாறு அணையின் நீர்த்தேக்க பரப்பு பகுதி என்பதால் கார் பார்க்கிங் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குமுளியைச் சேர்ந்த தாமஸ் ஆபிரகாம் என்பவர், கடந்த 2014 ஜூன் மாதம் தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொண்டது.
தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தடை
இதன் அடிப்படையில் ஆனவச்சால் கார் பார்க்கிங் அமைவதற்கு 2015 செப்.5-ல் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. மேலும், இந்த வழக்கில் மத்திய தலைமை நில அளவை அலுவலர் சொர்ண சுப்பாராவ் மற்றும் மத்திய வனத்துறை இயக்குனர் சோமசேகர் கொண்ட குழு சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால், அப்போதைய அதிமுக அரசு வழக்கு விசாரணையின்போது இதில் எவ்வித முனைப்பும் காட்டாததாலும், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் ஆஜர் ஆகாதாலும் தேக்கடி பெரியாறு புலிகள் காப்பதத்தின் கோரிக்கையை ஏற்று ஆனவச்சால் பகுதியில் கட்டிடங்கள் இல்லாத வாகன நிறுத்துமிடம் மட்டும் அமைத்துக் கொள்ள 2017ல் தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் விதிமுறைகளுடன் கூடிய தற்காலிக உத்தரவை பிறப்பித்தது. ஆனால், அந்த இடத்தில் கார் பார்க்கிங்காக கட்டிடப் பணிகள் நடைபெற்றதால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் நில அளவை தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வை குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும் என்றும் இது குறித்து இரு மாநில அரசுகளும் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இரு மாநில அரசு பேச்சுவார்த்தை தோல்வி
இது தொடர்பாக இரு மாநில அரசுகள் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஓ.எஸ். ஓகா அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சர்வே ஆஃப் இந்தியா அல்லது அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் மூலம் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் திருவிதாங்கூர் மகாராஜா தமிழகத்திற்கு குத்தகைக்கு அளித்ததாக கூறப்படும் பகுதிகளை முழுமையாக அளவில் கணக்கிட வேண்டும். அதன் பிறகு கேரளா அரசின் கார் பார்க்கிங் பகுதி குத்தகை விடப்பட்ட நிலத்திற்குள் வருகிறதா என்பதையும், அந்தப் பகுதியில் கட்டுமானம் அமைந்துள்ளதா என்பதையும் தெளிவாக கணக்கெடுப்பு செய்ய வேண்டும். மேலும், மூன்று மாதத்தில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை இந்த ஆண்டு (2024) மார்ச் 11ம் தேதிக்கு மாதம் ஒத்திவைக்கப்பட்டது.
ஒரு தலைபட்ச அறிவிப்பு
இதை அடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், சர்வே ஆஃப் இந்தியா திட்ட இயக்குனர்கள் ராஜசேகர், மகேஷ் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் தமிழக-கேரள அதிகாரிகளுடன் கடந்த 2024 மார்ச் மாதம் தற்போதுள்ள கார் பார்க்கிங் பகுதி, வல்லக்கடவு-வண்டிப்பெரியாறு அணைப்பகுதி உள்ளிட்ட இடங்களில் தரைவழி சர்வேயும், வண்டிப்பெரியாறு வாலார்டி, கருப்பு பாலம் பகுதிகளில் ட்ரோன் மூலம் வான் வழியாகவும் சர்வே நடத்தினர். அதன்படி சர்வே ஆஃப் இந்தியா அதிகாரிகள் மூன்று மாத கால அவகாசத்தில் நடத்திய சர்வே அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதன்படி 2.5 ஏக்கர் ஆனவச்சால் பகுதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்தேங்கும் பகுதியிலிருந்து விலகி இருப்பதாகவும் அந்தப் பகுதி முழுக்க கேரளா வனத்துறைக்கு சொந்தமான பகுதி என ஒரு தலைப்பட்சமாக அறிவித்துள்ளது. சர்வே ஆஃப் இந்தியாவின் தீர்ப்பை கையில் எடுத்துக்கொண்ட பெரியார் புலிகள் காப்பகம் அதை ஆனவச்சால் மெகா கார் பார்க்கிங்காக அறிவித்துள்ளது.
அபகரிக்க முயலும் கேரள அரசு
பெரியாறு வைகை பாசன விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக் பாலசிங்கம் கூறியிருப்பதாவது: முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேங்கும் பகுதிக்குள் வரும் ஆனவச்சால் பகுதி, தமிழக அரசின் ஒப்பந்தத்தின் கீழ் வருகிறது. இது தொடர்பாக 1886ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்த வரைபடம் இரு மாநில அரசுகளின் கைவசம் உள்ளது. இந்த நிலையில், சர்வே ஆஃப் இந்தியாவின் ஒரு தலைபட்சமான முடிவை கையில் எடுத்துக் கொண்டு கேரளா அரசும், பெரியார் புலிகள் காப்பகமும் அந்த இடத்தை அபகரிக்கும் வகையில் மெகா கார் பார்க்கிங்காக அறிவித்திருக்கிறது.
டிச.1ல் தமிழக அமைப்புகள் போராட்டம்
எனவே, கார் பார்க்கிங் என்ற பெயரில் ஆனவச்சால் பகுதியை அபகரிக்க முயலும் பெரியார் புலிகள் காப்பகத்தையும், கேரளா மாநில அரசையும் கண்டித்தும், ஆனவச்சால் சமநிலை பகுதியை பெரியார் புலிகள் காப்பகத்திடம் இருந்தும் கேரள மாநில அரசிடமிருந்து மீட்க கோரியும் சர்வே ஆஃப் இந்தியாவின் ஒரு தலைபட்சமான நடவடிக்கையை கண்டித்தும், பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் பாரதிய பார்வேர்ட் பிளாக், தேவேந்திர குலவேளாளர் கூட்டமைப்பு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பான பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாபெரும் முற்றுகை போராட்டம் வரும் டிச.1ம் தேதி லோயர் கேம்பில் நடத்த உள்ளோம்’ என்றார்.
The post ஆனவச்சால் விவகாரத்தில் ‘சர்வே ஆப் இந்தியாவின்’ ஒருதலைபட்ச அறிவிப்பால் அபகரிக்கப்படும் முல்லைப் பெரியாறு நீர்தேக்கப் பகுதி: ஒன்றிய, கேரள அரசுகளைக் கண்டித்து தமிழக அமைப்புகள் போராட்ட அறிவிப்பு appeared first on Dinakaran.