டெல்லி: மணிப்பூர் மாநிலத்துக்கு மேலும் 5,000 துணை ராணுவ படை வீரர்களை அனுப்ப ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மணிப்பூரின் ஜிரிபாம் பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கும் (சிஆர்பிஎப்), குக்கி தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையும் 10 குக்கி தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து ஜிரிபாமில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
அதன்பின் மாநிலத்தில் நடந்த வன்முறையால் 3 அமைச்சர்கள், 6 எம்எல்ஏக்கள் வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில் மணிப்பூரில் ஏற்பட்ட சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டால், ஒன்றிய அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மணிப்பூர் மாநிலத்துக்கு மேலும் 5,000 துணை ராணுவ படை வீரர்களை அனுப்ப ஒன்றிய அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இந்த வாரமே மணிப்பூர் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களில் 35 கம்பெனி வீரர்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து (சிஆர்பிஎப்) பெறப்படும். 15 கம்பெனி வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படையிலிருந்து (பிஎஸ்எப்) அனுப்பப்படும் என கூறப்படுகிறது. சிஆர்பிஎப் தலைமை இயக்குனர் ஏ.டி.சிங் மற்றும் மத்திய ஆயுத காவல் படையின் மூத்த அதிகாரிகள் மாநிலத்தில் முகாமிட்டுள்ளனர்.
The post மணிப்பூர் மாநிலத்துக்கு மேலும் 5,000 துணை ராணுவ படை வீரர்களை அனுப்ப ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.