×
Saravana Stores

சபரிமலையில் நடை சாத்திய பிறகும் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதி


திருவனந்தபுரம்: சபரிமலையில் நடை சாத்தப்பட்ட பின்னரும் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இதற்கிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் சிறப்பு அதிகாரி ஆலோசனை நடத்தினார். சபரிமலையில் மண்டல கால பூஜைகளுக்காக நடை திறந்த மூன்று நாட்களில் 1.70 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று காலை பக்தர்கள் வருகை குறைவாக இருந்த போதிலும் மதியத்திற்குப் பின்னர் பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். இதற்கிடையே நேற்று ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 6 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்களும் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர். இதில் நேற்று இரவு நடை சாத்தும் வரை 71 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மண்டல, மகரவிளக்கு காலங்களில் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரங்களில் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்படவில்லை. இதன் காரணமாக நடை திறக்கும்போது நெரிசல் அதிகரித்தது. இதனால் நடை சாத்தப்பட்டிருக்கும் நேரத்திலும் பக்தர்களை 18ம் படி ஏற அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. தற்போதும் இதேபோல நடை சாத்தப்பட்டுள்ள நேரத்திலும் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் கோயிலின் வடக்கு நடையில் காத்திருக்க வேண்டும். நடை திறந்தவுடன் இந்த பக்தர்கள் தரிசனத்திற்காக முதலில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் ஆகியோருக்கும் தரிசனத்திற்கு தனி வரிசை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இவர்கள் 18ம் படி ஏறியவுடன் நடைபாலத்தில் செல்லாமல் நேராக தரிசனம் செய்யலாம். இதற்கிடையே சபரிமலை சன்னிதானத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. இது குறித்து சிறப்பு போலீஸ் அதிகாரி பைஜு, போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.

The post சபரிமலையில் நடை சாத்திய பிறகும் பக்தர்கள் 18ம் படி ஏற அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Thiruvitangur Devasam Board ,Mandala Kala Pooja ,
× RELATED பக்தர்களின் சரண கோஷம் முழங்க சபரிமலை...