- மகா யூதி
- மகா விகாஸ் அகாடி கூட்டணி
- மகாராஷ்டிரா
- மும்பை
- மகா விகாஸ் அகாடி
- மகாராஷ்டிரா சட்டமன்றம்
- தின மலர்
மும்பை: மகாயுதி, மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சிகளுக்கு இடையே முதல்வர் பதவிக்கு 6 பேர் போட்டியில் உள்ளதால், 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தால் தான் தெரியும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடக்கிறது. ஒருபுறம் ஆளும் மகாயுதியும் (பாஜக தலைமையிலான கூட்டணி) மறுபுறம் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதியும் (காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி) களத்தில் உள்ளனர். இரு கூட்டணி கட்சிகளும் ஆட்சியை கைப்பற்ற ஏராளமான வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. இந்தத் தேர்தலில் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்பது குறித்து இரு கூட்டணிகளும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
அதனால் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார்? என்பது கேள்வியாக உள்ளது. முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை மகாயுதி மற்றும் மகா விகாஸ் அகாதி ஆகிய இரு கூட்டணிகளும் அறிவிக்காததால் வேட்பாளர்களும் பிரசாரத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்டனர். முதல்வர் பதவிக்கு இரு கூட்டணியிலும் தலா மூன்று வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மகா விகாஸ் அகாதி கூட்டணியை பொறுத்தமட்டில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தான் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறினார். அதேநேரம் மாநில காங்கிரஸ் தலைவரான நானா படேல், காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக முன்னிலைப் படுத்தப்படுகிறார். அதேபோல் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலும் முதல்வர் வேட்பாளர் பதவிக்கு சரத்பவாரின் மகளான சுப்ரியா சுலேவின் பெயரும் விவாதிக்கப்படுகிறது. ஆனால் மூவரின் பெயரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மகாயுதி கூட்டணியை பொறுத்தமட்டில் தற்போதைய துணை முதல்வர்களான பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் முதல்வர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். அதேநேரம் தற்போதைய முதல்வரான ஏக்நாத் ஷிண்டே, மீண்டும் தான் முதல்வராக விருப்பம் தெரிவித்து வருகிறார். இந்த தேர்தலில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றால், முதல்வர் பதவி யாருடைய கைக்கு போகும் என்பதும் குழப்பமாகவே உள்ளது. பாஜக 149 தொகுதிகளிலும், ஏக்நாத்தின் சிவசேனா 81 தொகுதிகளிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சீட் ஒதுக்கீட்டின்படி பார்த்தால் பாஜக முன்னிலை வகிப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸ் கட்சியை விட பாஜக அதிக இடங்களில் போட்டியிடுகிறது. முதல்வர் பதவிக்கு மகாயுதி கூட்டணியில் 3 பேரும், மகா விகாஸ் அகாதியில் மூன்று பேரும் என 6 பேர் களத்தில் உள்ளனர்.
ஏற்கனவே சரத்பவார் அளித்த பேட்டி ஒன்றில், ‘மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஒரு பெண்ணாக இருப்பார்’ என்று கூறினார். அதனால் மகா விகாஸ் யுகதி கூட்டணி வெற்றிப் பெற்றால் சுப்ரியா சுலே முதல்வராக அறிவிக்கப்படுவாரா? என்ற விவாதமும் சூடுபிடித்துள்ளது. இந்த விசயத்தில் காங்கிரஸ் மவுனமாக இருக்கிறது. அதேநேரம் மாநில தலைவர் நானா பட்டேலை காங்கிரஸ் ஆதரித்து வருகிறது. எனவே மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் பதவிக்கு 6 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வரும் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்கு பின்னரே மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் யார்? என்பது தெரியவரும் என்பதால், வேட்பாளர்கள் மட்டுமின்றி வாக்காளர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சரத்பவார் அளித்த பேட்டி ஒன்றில், ‘மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் ஒரு பெண்ணாக இருப்பார்’ என்று கூறினார்.
The post மகாயுதி, மகா விகாஸ் அகாதி கூட்டணி கட்சிகளுக்கு இடையே மகாராஷ்டிராவில் முதல்வர் பதவிக்கு 6 பேர் போட்டி?.. 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்தால் தான் தெரியும் appeared first on Dinakaran.