இம்பால்: தேசிய மக்கள் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதால் மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழும் நிலையில், மாநில அமைச்சர், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் மணிப்பூரில் தீவிரவாதிகளால் 6 பேர் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கடந்த 2 நாட்களாக மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. மாநில அமைச்சர்கள் 3 பேர் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட 6 எம்எல்ஏக்களின் வீடுகள் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது. இதையடுத்து காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தச் சூழலில், மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி, மணிப்பூர் பாஜக அரசுக்கு அளித்துவந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது.
ெமாத்தம் 60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் தேசிய மக்கள் கட்சிக்கு 7 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆளும் பாஜக 32 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. நாகா மக்கள் முன்னணி (5), ஐக்கிய ஜனதா தளம் (6) கட்சிகளின் ஆதரவும் பாஜகவுக்கு இருப்பதால் ஆட்சிக்கு பாதிப்பில்லை. எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 5 எம்எல்ஏக்களும், 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனர். மணிப்பூர் பாஜக அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்றது குறித்து பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான தேசிய மக்கள் கட்சி கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘மணிப்பூரில் கடந்த சில நாள்களாக நிலைமை மிக மோசமடைந்துவிட்டது. அப்பாவி உயிர்கள் பறிபோவது தொடர் கதையாக உள்ளது.
மாநில முதல்வர் பிரேன் சிங் தலைமையிலான மாநில அரசு அமைதியை நிலைநாட்ட முற்றிலும் தவறிவிட்டது. தற்போதைய சூழலைக் கருத்தில்கொண்டு, மணிப்பூர் அரசுக்கு அளித்துவந்த ஆதரவை உடனடியாகத் திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டம் மற்றும் வன்முறை எதிரொலியாக, மாநிலத் தலைமைச் செயலகம், ஆளுநர் மாளிகை, பாஜக தலைமையகம், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post தேசிய மக்கள் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றதால் மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு ஆபத்தா?… அமைச்சர், எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு appeared first on Dinakaran.