ஆரணி, நவ.18: ஆரணி அருகே 8 சவரன் நகைக்காக தாக்கப்பட்டதில் மூதாட்டி உயிரிழந்தார். அவரது பேத்தியை 2 தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் ஈபி நகர் புதுத்தெருவை சேர்ந்தவர் வேதபுரி இவரது மனைவி சிந்தாமணி (75), இவரது கணவர் இறந்து விட்டதால் வீட்டில் தனியாக வசித்து வந்தார். அதேபகுதியில், வசித்துவரும் சிந்தாமணியின் மகள் வழிபேரன் பிரதாப் குடும்பத்தினர் அவரை பராமரித்து வந்தனர். கடந்த 11 ம் தேதி அன்று வழக்கம் போல் பிரதாப்பின் மனைவி சன்மதி அவரது தாய் உமா ஆகிய இருவரும் சிந்தாமணிக்கு மதிய உணவு வழங்குவதற்காக அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது, கதவுகள் மூடப் பட்டிருந்தை, உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சிந்தாமணி தலையில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.
அப்போது, கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் திருட்டுபோன தெரிய வந்தது. உடனே, அவரை மீட்டு, ஆரணி அரசு மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சிந்தாமணியின் மற்றொரு மகனான ஓய்வுபெற்ற போலீசாரின் மகள் மதுமதி நகைக்காக பாட்டியை தலையில் தாக்கி 8 சவரனை திருடி சென்றது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மதுமதியை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவமனையில் சிந்தாமணி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், திருட்டு வழக்கை கொலை வழக்காக மாற்றி, டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் 2 தனிப்படை அமைத்து மதுமதியை வலைவீசி தேடி வருகின்றனர்.
The post 8 சவரன் நகைக்காக மூதாட்டி கொலை பாசக்கார பேத்திக்கு 2 தனிப்படை வலை ஆரணி அருகே appeared first on Dinakaran.