பெரணமல்லூர், நவ.18: பெரணமல்லூர் அருகே சவுக்கு தோப்பில் நெசவு தொழிலாளி மர்ம சாவில் 3 பேரை ஐந்து மணி நேரத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரணமல்லூர் அடுத்த மேலானூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை(47) நெசவு தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (40). தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 15ம் தேதி மாலை நெசவு தொழில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அண்ணாதுரைக்கு செல்போனில் தகவல் வந்ததை தொடர்ந்து வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பின்னர் கொழப்பலூர்-விநாயகபுரம் பகுதியை இணைக்கும் செய்யாற்று படுகையில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலம் அருகில் உள்ள சவுக்கு தோப்பில் அண்ணாதுரை இறந்து கிடப்பதாக அவரது மனைவிக்கு உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது, லட்சுமியின் கணவர் அண்ணாதுரை இறந்து கிடப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பெரணமல்லூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சவுக்கு தோப்பில் மர்மமாக இறந்த நெசவுத் தொழிலாளி அண்ணாதுரை அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அண்ணாதுரைக்கு வந்த செல்போன் நம்பர் மூலம் விசாரணை மேற்கொண்ட போது அண்ணாதுரைக்கு கஞ்சா அடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிய வந்தது. மேலும் அன்று கொழப்பலூர் பகுதியைச் சேர்ந்த தீபக்(20), அபிஷேக் குமார்(20) ஆகியோர் சவுக்கு தோப்புக்கு பகுதிக்கு அண்ணாதுரையை கஞ்சா அடிக்க அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அபிஷேக் குமார், தீபக் அண்ணாதுரையிடம் போலீஸ் கஞ்சா புகைக்கும் நபர்களை கண்காணிப்பதாக கூறியுள்ளார். அந்த நேரத்தில் அங்கு காக்கி உடையுடன் வந்த ஜெகன்(30) என்பவரை கண்ட அண்ணாதுரை பயந்து தலை தெறிக்க ஓடியதால் மூச்சு வாங்கியதில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மூவரும் அவரிடம் இந்த செல்போனை பறித்து வேறு இடத்தில் வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். மர்ம மரணம் குறித்து எஸ்பி சுதாகர் உத்தரவின் பேரில் செய்யாறு சரக டிஎஸ்பி சண்முகவேலன் ஆலோசனைப்படி, பெரணமல்லூர் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையிலான போலீசார் துரிதமாக செயல்பட்டு செல்போன் உதவியுடன் அண்ணாதுரை மரணத்திற்கு காரணமான 3 பேரை ஐந்து மணி நேரத்தில் கைது செய்து செய்யாறு கோர்ட்டில் நேற்று ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post சவுக்கு தோப்பில் நெசவு தொழிலாளி மர்ம சாவில் 3 பேர் கைது பெரணமல்லூர் அருகே appeared first on Dinakaran.