கோட்ட நிர்வாகத்தை கண்டித்து மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

ஊட்டி,நவ.18: தொழிலாளர் விரோத போக்கை கையாளும் மின்வாரிய குன்னூர் கோட்ட நிர்வாகத்தை கண்டித்து மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு.,) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மின்வாரிய குன்னூர் கோட்ட நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு.,) சார்பில் குன்னூரில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நேற்று முன்தினம் நடந்தது.குன்னூர் கோட்ட செயலாளர் அபுபக்கர் தலைமை வகித்தார். குன்னூர் கோட்ட கணக்கீட்டு பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜா, மின் ஊழியர் மத்திய அமைப்பு ஊட்டி கோட்ட தலைவர் தேவராஜ் மற்றும் நீலகிரி கிளை தலைவர் ரவி சண்முகம், கணக்கீட்டு பிரிவு கன்வீனர் ரமேஷ், நீலகிரி கிளை செயலாளர் சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நிர்வாகிகள் கூறுகையில், மின்வாரிய கணக்கீட்டு ஊழியர்களுக்கு எதிராக குன்னூர் கோட்ட செயற்பொறியாளர் வழங்கிய முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு எதிரான உத்திரவை திரும்ப பெற வேண்டும். தவறும் பட்சத்தில் ஓரிரு நாட்களில் தொழிலாளர் ஆணையரிடம தொழில் தாவாவிற்கு செல்வது என்றும்,அதிகரட்டி பிரிவு அதிகாரியின் தொழிலாளர் விரோத போக்கு குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதனை கண்டித்து மாபெரும் இயக்கம் நடத்துவது என்றும், விருப்ப ஊர் மாற்றம் பெற்ற கேங்மேன் பணியாளர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளின் அரசியலை திணிக்க கூடாது என்றனர். தொடர்ந்து தொழிலாளர் விரோத போக்கை கையில் எடுத்து போராட்டத்தை தூண்டுவதாக மின்வாரிய குன்னூர் கோட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான மின்வாரிய ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post கோட்ட நிர்வாகத்தை கண்டித்து மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: