ஸ்ரீபெரும்புதூர், நவ.18: ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி 12வது வார்டில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 12வது வார்டில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. விக்னேஷ் நகரில் உள்ள தெருக்களில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், நீண்ட நாட்களாக சாலையில் தேங்கும் நிலை உள்ளது. அண்மையில், பெய்த மழையின் காரணமாக தற்போது மழைநீருடன், கழிவுநீரும் கலந்து அருகிலுள்ள சரோஜினி நகர் பூங்காவிலும் சூழ்ந்து குட்டைபோல தேங்கி நின்று, கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால், அப்பகுதி மக்களுக்கு நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது என புகார் கூறுகின்றனர். கழிவுநீரை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்திடம், பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் கேட்டதற்கு, ‘விக்னேஷ் நகரில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் முடிந்து, பூமிக்கு அடியில் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்க, குடியிருப்பு வாசிகள் டெபாசிட் பணம் செலுத்தாத காரணத்தால், கழிவுநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் குடியிருப்புகளுக்கு இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஸ்ரீபெரும்புதூர் 12வது வார்டில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.