தமிழகத்தில் போதை பொருளை கட்டுப்படுத்தும் பணியில் உள்ள போலீசாரின் நடவடிக்கையை மேற்பார்வையிட கண்காணிப்பு குழு: ஒன்றிய, தமிழக அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் போதைப் பொருளைக் கட்டுப்படுத்தும் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்குமாறு ஒன்றிய மற்றும் தமிழக அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பெரும்பாக்கம், துரைப்பாக்கம், ஊரப்பாக்கம், ஆல் இந்தியா ரேடியோ பகுதி உள்ளிட்ட இடங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரிய வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி. பாலாஜி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் மனுவை தாக்கல் செய்தார். அதில், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளையும், போதையில்லா தமிழ்நாடு என்ற இணையதளம் சார்ந்த செயலி துவங்கப்படுவது குறித்தும் விளக்கப்பட்டிருந்தது. அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், அண்டை மாநிலங்களில் இருந்து கொரியர் மூலமாக, போதைப் பொருட்கள் தமிழகத்திற்குள் நுழைகின்றன. மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் போதை பொருட்கள் சாதாரணமாக கிடைக்கிறது. இதனை கட்டுபடுத்த மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சட்ட பணிகள் ஆணையக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 100 மீட்டருக்குள் ஸ்டேஷனரி மற்றும் தின்பண்ட கடைகள் தவிர, வேறு எந்த கடைகளும் அமைக்கக் கூடாது. போதைப் பொருளைக் கட்டுப்படுத்துவதில் காவல் துறையினரின் நடவடிக்கைகளை மேற்பார்வையிட போதை பொருள் தடுப்பு அதிகாரி ஒருவரையும், சிபிஐ அதிகாரி ஒருவரையும், அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்பு கண்காணிப்புக் குழுவையும் அமைக்க வேண்டும். இதில், கூடுதல் டிஜிபி, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் இடம்பெற வேண்டும். சிறப்பு கண்காணிப்பு குழுவில் இடம்பெற உள்ள அதிகாரிகளின் விவரங்களை ஒன்றிய மற்றும் தமிழக அரசு சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

* பள்ளிகளிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு ஸ்டேஷனரி, தின்பண்ட கடைகள் தவிர வேறு கடைகள் இருக்க கூடாது- நீதிபதிகள்

* மாநில எல்லைகளில் ஒன்றிய மற்றும் தமிழக அரசு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

The post தமிழகத்தில் போதை பொருளை கட்டுப்படுத்தும் பணியில் உள்ள போலீசாரின் நடவடிக்கையை மேற்பார்வையிட கண்காணிப்பு குழு: ஒன்றிய, தமிழக அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: