தி.நகரில் அமைய உள்ள சென்னையின் முதல் இரும்பு பாலம் டிசம்பரில் திறப்பு: அதிகாரிகள் தகவல்

சென்னை: சென்னையில் நிலவும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல். வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நகரின் முக்கிய பகுதிகளில் போதிய கட்டமைப்பு இல்லாததால் வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் அமைத்தல், மெட்ரோ ரயில் பாதை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நகரம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையின் வர்த்தக பகுதியின் இதயமாக தி.நகர் உள்ளது.

இங்குள்ள பேருந்து நிலையத்துக்கு, தினமும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னையின் புறநகர் பகுதியில் இருந்து 2,000 நடைகள் மாநகர பேருந்துகள் வந்து செல்கின்றன. இதனால், தி.நகரில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. சென்னையின் முக்கிய வணிக மையமான தி.நகரில் கூட்ட நெரிசல் அதிகமுள்ள நாட்களில் அதிகபட்சமாக, 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நடைகள் வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தி.நகருக்கு வந்து செல்லும் பேருந்து சேவைகள் அதிகரிப்பால், தி.நகர் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் அண்ணாசாலையில் இருந்து சிஐடி நகர் பகுதிக்கு பேருந்துகள் திரும்பும்போது சைதாப்பேட்டையில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னையில் எங்கெல்லாம் மேம்பாலம் தேவை என்பதை ஆய்வு செய்து சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்டவை பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் 1வது மெயின் ரோடு இடையே ரூ.131 கோடியில் புதிய மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பாலம் முழுவதும் இரும்பால் கட்டப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலேயே கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இரும்புப் பாலம் அமைந்துள்ளது.

அதனை தொடர்ந்து மாநிலத்தின் 2வது முழு இரும்பு பாலம் தற்போது வர்த்தக பகுதியான தி.நகரில் அமைகிறது. மேம்பாலத்துக்கு 53 பில்லர்கள் 8.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்படுகிறது. தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள மேம்பாலம் 747 மீட்டர் நீளம் கொண்டது. இந்த மேம்பாலத்தின் சாய்தளத்தை தகர்த்து புதிதாக மேம்பாலம் 1.2 கிலோ மீட்டர் அளவில் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து பர்கிட் சாலை மற்றும் மேட்லி சுரங்கப்பாதை சந்திப்பு, தெற்கு உஸ்மான் சாலையில் இருந்து தென்மேற்கு போக் சாலை மற்றும் புதிய போக் சாலை சந்திப்பு, சிஐடி நகர் முதல் மெயின் சாலை மற்றும் சிஐடி நகர் வடக்கு சாலை சந்திப்பு ஆகிய 3 சந்திப்புகளையும் இணைக்கும் வகையில் பாலம் அமைகிறது.

இந்த மேம்பாலம் அமைந்தால் தி.நகரில் போக்குவரத்து நெரிசல் முழுவதுமாக குறையும். புதிய மேம்பாலம் 1.2 கிலோ மீட்டர் நீளத்தில், 8.40 மீட்டர் அகலத்தில் ரூ.131 கோடி செலவில் கட்டப்படுகிறது. வாகனங்கள் பாலத்தின் மீது சென்றால் அதிர்வை தாங்கும் வகையில் புதிய தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் பாதுகாப்பிற்காக பரிந்துரைக்கப்பட்ட எடையை விட 2.5 மடங்கு அதிக எடையில் தூண் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள பாலத்தின் சாய்தளத்தை இணைக்கும் பகுதியில் மேம்பாலத்திலிருந்து வெளியேறுவதற்கும், நுழைவதற்கும் ஏற்றவாறு பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பாலத்தின் பணிகள் அனைத்தையும் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் மழை போன்ற காரணங்களால் தாமதமானால் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வரை பணிகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ஆயுட்காலம் மிகுந்த இரும்புத்தூண்
சென்னையில் அமைக்கப்பட்டு வரும் பாலங்கள் அனைத்தும் சிமென்ட் கான்கிரீட் கொண்டுதான் அமைக்கப்படும். ஆனால் முதல் முறையாக இரும்பு தூண்கள் கொண்டு மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இரும்பு தூண்களுக்கு மேல் சிமென்ட் கான்கிரீட் கலவை வைக்கப்பட உள்ளது. தரைக்கு உள்ளே அமைக்கப்படும் தூணின் அடிப்பகுதி சிமென்ட் கான்கிரீட் கொண்டு அமைக்கப்படுகிறது. தூண் மற்றும் பாலத்தை தாங்கி பிடிக்கும் பகுதி இரும்பால் அமைக்கப்படுகிறது. சேலம் இரும்பு ஆலையில் இந்த தூண் போன்ற வடிவமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த இரும்பு தூணானது 50 ஆண்டுகள் ஆயுட் காலம் உடையது. இணைப்பு முடிந்த உடன் பாலத்தின் மேல் பகுதி அமைக்கும் பணி நடைபெறும். பாலத்தின் மேல் பகுதி வழக்கம் போல் சிமென்ட் கான்கிரீட் கொண்டு மேற்கொள்ளப்படும்.

The post தி.நகரில் அமைய உள்ள சென்னையின் முதல் இரும்பு பாலம் டிசம்பரில் திறப்பு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: